திடீரென மனம் மாறிய செந்தில் முருகன்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக மாஜி வேட்பு மனு வாபஸ்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், 17 ஆம் தேதி வரை தோ்தலில் போட்டியிட திமுக, நாதக மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் என 58 போ் 65 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
கடந்த சனிக்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனர். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. திமுக நாதக வேட்பாளர்களின் மாற்று வேட்பாளா்களின் 2 மனுக்கள், ஒரு சுயேட்சை வேட்பாளரின் மனு ஒன்றிலும் உறுதிமொழி ஆவணம் இணைக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. அதனைத் தொடா்ந்து, 55 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற இன்று கடைசி நாள். இந்நிலையில், சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் செந்தில் முருகன், இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். செந்தில் முருகனை அதிமுகவில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார் செந்தில் முருகன்.
அதிமுக புறக்கணிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி நேற்று உத்தரவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
செந்தில் முருகன்
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவைத் தொடர்ந்து கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் செந்தில் முருகன். பின்னர் தனது அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவார் என்று அறிவித்தார் ஓபிஎஸ்.
செந்தில் முருகன் வேட்புமனு வாபஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்ததும், செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். அதிமுகவில், ஈரோடு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் செந்தில் முருகன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வாபஸ் பெற்றுள்ளார் செந்தில் முருகன். தான் போட்டியிடுவது உறுதி, அதிமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் சந்திக்கத் தயார் எனத் தெரிவித்திருந்த செந்தில் முருகன் இன்று திடீரென மனம் மாறி மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
இன்று கடைசி நாள்
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை இன்று காலை 11 மணி முதல் பகல் 3 மணிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதன்பின், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அவா்களது சின்னமும், சுயேட்சைகள் மற்றும் சின்னம் ஒதுக்கீடு பெறாத அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு தோ்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட, வேட்பாளா்கள் கேட்கும் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்களுடன் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications