“துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்”.. அதிமுக நிர்வாகி பெயரை சொல்லி சீறிய செங்கோட்டையன்! பரபர!
ஈரோடு: "கடந்த தேர்தலின்போது, அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பேசியவர் இ.எம்.ராஜா. அந்த ஆடியோ என்னிடம் உள்ளது. துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக நிர்வாகி பற்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் இன்று நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, அந்தியூரை சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகி ஒருவர் தங்களுக்கு அதிமுக சார்ந்த கூட்டங்களுக்கு அழைப்பு வருவதில்லை என கூட்டத்தில் இருந்து புகார் தெரிவித்தார்.
அப்போது செங்கோட்டையன் புகார் கூறிய பிரவீன் என்பவரை மேடைக்கு அழைத்து பேசினார். அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அவர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அவரை இழுத்து கீழே தள்ளி நாற்காலிகளை எறிந்து கூட்ட அரங்கை விட்டு வெளியேற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பேசிய செங்கோட்டையன், "தற்போது பிரச்சனை செய்தவர் அதிமுக நிர்வாகியே இல்லை. இதற்கு மிக முக்கிய காரணம் அந்தியூரைச் சேர்ந்த இ.எம்.ராஜாதான். அவரது ஏற்பாட்டில்தான் இந்த நபர் இங்கு வந்து பிரச்சனை செய்துள்ளார். கடந்த தேர்தலின்போது, அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பேசியவர் இ.எம்.ராஜா. அந்த ஆடியோ என்னிடம் உள்ளது. அப்படிப்பட்ட துரோகத்தை செய்துவிட்டு இப்போது குழப்பத்தை ஏற்படுத்த ஆட்களை அனுப்பியுள்ளார். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்" என்று கூறினார்.
அந்தியூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வான இ.எம்.ராஜாவை அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் நியமித்தார். இந்நிலையில், இ.எம்.ராஜா பெயரைக் குறிப்பிட்டு செங்கோட்டையன் விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
"உண்மையான தொண்டராக இருந்தால் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும்; என்ன குறை இருந்தாலும் தீர்ப்பதாக கூறியுள்ளேன், எந்த பிரச்சனையும் இல்லை" என கோபியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பியதால் தாக்கப்பட்ட பிரவீன், அதிமுக உறுப்பினரே இல்லை என செங்கோட்டையன் பேசிய நிலையில், அவருடன் பிரவீன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், கட்சிக் கூட்ட அழைப்பிதழ்களில் பிரவீன், ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் என்றும் பெயர் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications