சனாதனத்திற்கு எதிராக பேசுனவங்கள கண்டிக்கல.. போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் நிர்வாகி! பாஜகவில் ஐக்கியம்
டெல்லி: கூட்டணி கட்சி தலைவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிய போது காங்கிரஸ் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தது. இந்துவாக இருக்கும் எனக்கு கட்சியின் நிலைப்பாடு மிகவும் தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியது என்று கூறி பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் நிர்வாகி கவுரப் வல்லப்.
தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலுக்கு வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் அரசியல் கட்சியினர் கட்சி மாறும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கௌரவ் வல்லப், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து விட்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.
ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்று தீவிரமாக பேசி வந்த கவுரவ் வல்லப், அண்மையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
சனாதன விவகாரத்தில் அமைதி காத்தது: அந்த கடிதத்தில், நாட்டில் மிகப் பழமையான கட்சியான காங்கிரஸ், இளைஞர்களின் திறமைக்கும் யோசனைகளுக்கும் மதிப்பு வழங்கும் என நான் நினைத்தேன். ஆனால், சில ஆண்டுகளாக எனது எண்ணம் மாறியுள்ளது. அதற்கு காரணம், மக்களுடனான காங்கிரஸ் கட்சியின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் நிகழ்வில் காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு எனக்கு மிகவும் அதிருப்தி அளித்தது.
இந்துவாக இருக்கும் எனக்கு கட்சியின் நிலைப்பாடு மிகவும் தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியது. கூட்டணியில் இருப்பவர்கள் சனாதனம் குறித்து விமர்சித்த போது காங்கிரஸ் அதை கண்டிக்கவில்லை. சனாதன விவகாரத்தில் அமைதியாக கடந்து போவது, அத்தகைய பேச்சுக்களுக்கு கட்சி துணை போவதை போல உள்ளது என நினைக்கிறேன்.

பாஜகவில் இணைந்தார்: இது போன்ற காரணங்களால் இனியும் கட்சியில் நீடிக்க முடியாது" என்று கூறியிருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் கட்சி மீதான தனது அதிருப்தியை கொட்டி தீர்த்துவிட்டு கவுரவ் வல்லப் விலகியிருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சில மணி நேரங்களில் கவுரவு வல்லப், பாஜகவில் இணைந்துள்ளார்.
டெல்லியில் பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவே முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் கவுரவ் வல்லப். பாஜகவில் இணைந்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய கவுரவ் வல்லப், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமூக வலைத்தளங்களிலும் எழுதியுள்ளேன்.
சனாதன தர்மத்திற்கு எதிராக பேச்சு: அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டதில் இருந்தே என் மனதில் இத்தகைய கேள்விகள் இருந்தன. கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்ட போதும், காங்கிரஸ் கட்சி ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கூட்டணி கட்சி தலைவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிய போது காங்கிரஸ் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தது. தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன். எனது திறமையை பாஜக சரியாக பயன்படுத்திக்கொள்ளும் என நம்புகிறேன்' என்றார்.












Click it and Unblock the Notifications