கே.பி.சுந்தராம்பாளின் தியேட்டர் இடிப்பு! 56 ஆண்டு கால வரலாறு! 3 முதல்வர்கள் திறந்து வைத்த பெருமை!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாளுக்குச் சொந்தமான கே.பி.எஸ். தியேட்டர் (KBS Theatre) 56 ஆண்டுகள் கழித்து தற்போது இடிக்கப்பட்டுள்ளது. இந்த தியேட்டர் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திரையரங்கும் ஆகும்.
கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்பவர்தான் கே.பி.சுந்தராம்பாள். இவர் தமிழிசை, நாடகம், அரசியல், சினிமா, ஆன்மீகம் என பல துறைகளிலும் புகழ் பெற்றவர்.

இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்தார். வறுமை காரணமாக ரயில்களில் பாடி யாசகம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு நாள் இவரது பாடும் திறமையை கண்டு நடேச அய்யர் என்பவர் நாடக கம்பெனியில் சுந்தராம்பாளை சேர்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
16 வயது
1927 ஆம் ஆண்டு 16 வயதில் நாடக நடிகர் கிட்டப்பாவை திருமணம் செய்து கொண்டார். நன்றாக இருந்த வாழ்க்கையில் திடீரென சூறாவளி அடித்தது போல் 1933 ஆம் ஆண்டு கிட்டப்பா காலமானார். தனது 25 ஆவது வயதில் விதவை கோலம் பூண்ட சுந்தராம்பாள் அன்று முதல் வெள்ளை சேலை கட்டத் தொடங்கினார்.
சினிமாவில் சம்பாதித்த சுந்தராம்பாள்
அது போல் எந்த நடிகருக்கும் ஜோடியாக நடிப்பதில்லை என்ற சபதம் பூண்டார். இந்த நிலையில் சினிமாவில் நடித்தும் பின்னணி பாடியும் சம்பாதித்த பணத்தில் கொடுமுடியில் 1969 ஆம் ஆண்டு ஒரு தியேட்டரை கட்டினார். அந்த தியேட்டர் தற்போது 56 ஆண்டுகள் கழித்து இடிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர் பின்னணி
இந்த தியேட்டரின் பின்னணி குறித்து பார்க்கலாம். சினிமா துறைதான் சுந்தராம்பாளுக்கு ஒரு அடையாளத்தையும் புகழையும் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. அத்தனை ஆண் பாடகர்களுக்கு மத்தியில் தனது திறமையால் நிலைத்து நின்று பாடியவர் கே.பி.எஸ்.!
கொடுமுடியில் தியேட்டர்
தான் சம்பாதித்த காசில் கொடுமுடியில் ஒரு தியேட்டர் கட்ட வேண்டும் என்ற ஆசையில் கே.பி.சுந்தராம்பாள் தியேட்டர் கட்டினார். அது வரை 27 கி.மீ. தூரத்தில் கரூரில் உள்ள தியேட்டருக்கோ 40 கி.மீ. தூரத்தில் ஈரோட்டில் உள்ள தியேட்டருக்கு கொடுமுடி மக்கள் சென்று வந்தனர்.
கேபிஎஸ் தியேட்டர்
இந்த நிலையில் கடந்த 1969ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி கே.பி.எஸ். திரையரங்கம் என்ற தியேட்டரை கட்டினார். இந்த தியேட்டரின் திறப்பு விழாக்கு முன்னாள் முதல்வர்களா கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வந்திருந்தனர்.
3 முதல்வர்கள்
கொடுமுடியில் இருந்த முதலும் ஒரே தியேட்டரும் இதுதான். தற்போது கூட ஒரு தியேட்டர் இருக்கிறது. அந்த தியேட்டர் கூட கேபிஎஸ் தியேட்டருக்கு 15 கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட தியேட்டருக்கு 3 முன்னாள் முதல்வர்களும் வந்து சென்ற பெருமை உள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த போதிலும் இந்த மூவரும் கொடுமுடிக்கு ஒன்றாக சென்றதை மக்கள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.
முதல் திரைப்படம்
இந்த திரையரங்கில் துணைவன் என்ற படம்தான் முதலில் வெளியானது. தேவர் பிலிம்ஸ் இயக்கிய இந்த படத்தில் ஏ.வி.எம்.ராஜன், சவுகார் ஜானகி ஆகியோருடன் சுந்தராம்பாளும் நடித்திருந்தார். இந்த படத்தில் சுந்தராம்பாள் பாடிய பாடல், அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.
175 நாள் ஓடிய முந்தானை முடிச்சு
மேலு முந்தானை முடிச்சு என்ற படம் கேபிஎஸ் தியேட்டரில் வந்து 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சுந்தராம்பாள் 1980இல் இயற்கை எய்தியவுடன், தியேட்டர் நிர்வாகத்தை அவருடைய உறவினர்கள் எடுத்துக் கொண்டனர். பல பத்தாண்டுகளாக இந்த தியேட்டரில் பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவுக்கு பிறகு
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸின் போது லாக்டவுன் போடும் வரை இந்த தியேட்டர் இயக்கத்தின்தான் இருந்தது. அதன் பிறகு அங்கு பணியாற்றியவர்கள் எல்லாம் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த தியேட்டரில் எந்த படமும் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதனால் இந்த தியேட்டரை இடிக்க முடிவு செய்து தற்போது இடித்தாகிவிட்டது. கருணாநிதியும் எம்ஜிஆரும் தியேட்டரை திறந்து வைக்க, ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி வைத்த நிலையில் 56 ஆண்டுகள் கழித்து இந்த தியேட்டர் இடிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications