ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் திமுக தலைகள்.. காங்கிரஸ்காரர்களையே காணோம்.. செல்லூர் ராஜூ கிண்டல்!
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை காணவில்லை என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கட்சிக்காரர்கள் மட்டுமே நிறைந்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் காங்கிரஸ் கட்சியினரை காணவில்லை என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
அதுமட்டுமல்லாமல் தேமுதிக வேட்பாளராக ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஏராளமான சுயேட்சை வேட்பாளர் உள்பட மொத்தமாக 77 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து முக்கியக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்லூர் ராஜூ பேட்டி
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று ஈரோட்டிற்கு வந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ கூறுகையில், திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்களாகிவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றவில்லை. அதேபோல் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

திமுக அமைச்சர்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக 33 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு துரும்பையும் இந்த மாவட்டத்திற்காக கிள்ளி கூட போடவில்லை. காரில் மட்டுமே பவனி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் கட்டண வரி என பல்வேறு வரி உயர்வினாலும், விலைவாசி ஏற்றத்தாலும் மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி
நூல் விலை உயர்வினால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். விடியல் தருவேன் என கூறி மக்களை ஏமாற்றி 505 வாக்குறுதிகளை தந்து எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் திமுக அரசுக்கு மக்கள் இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் திமுக நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர். வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருக்கிறார். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் காங்கிரஸ் கட்சியினரை காணவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications