கரூர் தாசில்தார் சவுந்தரவல்லி! பௌத்ராவை பவித்ரானு மாற்ற ரூ 5 ஆயிரம் கேட்ட கொடுமை! சிக்க வைத்த ரேவதி
ஈரோடு: கரூர் மாவட்டம், கடவூர் அருகே பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம், திங்களூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ரேவதி. இவர் விவசாய கூலித் தொழிலாளி. இவர்களது மகள் பவித்ரா, ஈரோட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

பவித்ராவின் பிறப்பு சான்றிதழில் பவித்ரா என்பதற்கு பதிலாக பௌத்ரா என இருந்ததாம். இதனால் கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அணுகியிருந்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து நடையாய் நடந்த நிலையில் தாசில்தார் சவுந்தரவல்லியை ரேவதி சந்தித்தார். அப்போது அவரிடம் மகளின் பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் அளித்திருந்தார். அதை பெற்றுக் கொண்ட தாசில்தார் சவுந்தரவல்லி, பெயர் மாற்றம் செய்ய ரூ 5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது.
அவ்வளவு பணத்தை லஞ்சமாக கொடுக்க முடியாத நிலையில் உள்ள ரேவதி, தனது ஏழ்மை நிலையையும் தான் ஒரு விவசாய கூலித் தொழிலாளி என்பதையும் சவுந்தரவல்லியிடம் தெரிவித்தாராம். ஆனால் அந்த சவுந்தரவல்லியோ சற்றும் மனம் இறங்காமல், "பெயர் மாற்ற வேண்டும் என்றால் ரூ 5 ஆயிரத்துடன் வா" என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் என்ன செய்வது என தெரியாமல் ரேவதி திகைத்தார். உடனே லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸுக்கு போனார். அங்கு போலீஸாரின் அறிவுறுத்தலின்படி நேற்று வட்டாட்சியர் சவுந்தரவல்லியை சந்தித்து ரசாயனம் பூசப்பட்ட ரூ 5 ஆயிரத்தை லஞ்சமாக வழங்கினார்.
அந்த பணத்தை பார்த்துமே முகம் மலர்ந்த சவுந்தரவல்லி, "பணத்தை கொண்டு வந்துட்டியா, டக்குனு வேலையை முடிச்சி தரேன்" என சொல்லிபடியே பணத்தை பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், சவுந்தரவல்லியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜூன் மாதம் ரூ 75 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக நில எடுப்பு தனி வட்டாட்சியர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மாமல்லபுரம் வரை செல்லும் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீட்டு தொகை அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில், போளிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் வேல்யூ ஸ்பேஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்திய அரசு அதற்காக சுமார் ரூ 45 லட்சம் இழப்பீட்டு தொகையாக கொடுக்க வேண்டியிருந்தது.
இந்த தொகையை பெற பலமுறை நில எடுப்பு தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனிடம் அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆஸ்டின் ஜோசப் கேட்டும், அவர் காலதாமதம் செய்து வந்தாராம். இந்த நிலையில் ரூ 1 லட்சம் கொடுத்தால் நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகையை விடுவிப்பதாகவும் தெரிவித்தாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு புகார் செய்தார். அதன்பேரில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேசன் வழிகாட்டுதலின்படி முதல் கட்டமாக ரசாயனம் தடவிய ரூ 75 ஆயிரம் பணத்தை எட்வர்ட் வில்சனுக்கு தரகர்களான கோமதிநாகம், வெள்ளத்துரை ஆகியோரிடம் அந்த நிறுவன ஊழியர் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த ஆய்வாளர் மாலா உள்ளிட்ட தலைமையிலான போலீஸார் தனி வட்டாட்சியரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது போல் வட்டாட்சியர்கள், விஏஓக்கள், நில அளவையர்கள் உள்ளிட்டோரில் சிலர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி வருவது தொடர்கதையாகிவிட்டது.












Click it and Unblock the Notifications