சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் தீக்குண்ட திருவிழா! ஈரோடு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் தீ குண்டம் இறங்கும் திருவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோயில் பண்ணாரி அம்மன் ஆலயமாகும். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா கோலாகலமாக மார்ச் 25 ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவையொட்டி பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
இதற்காக தெப்பக்குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பின்னர் பண்ணாரி அம்மனிடம் பூவரம் கேட்டு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் மார்ச் 26ஆம் தேதி முதல் பண்ணாரி அம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கிராமங்கள் தோறும் வீதியுலா நடந்தது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தீகுண்டம் இறங்கும் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கினர். அப்போது காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட மக்களும் கர்நாடகா மாநிலத்தவர்களும் இந்த திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கில் வருகை தந்தனர். அவர்களுக்கு சிறப்பு பேருந்தும் இயக்கப்பட்டது.
தீகுண்டம் திருவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 26ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
