6 மணிக்கு பிறகு சேஞ்ச் ஆன ஈரோடு கிழக்கு.. சாலைகளில் கடும் டிராபிக் ஜாம்..அணிவகுத்த கட்சி நிர்வாகிகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் முடிந்து மற்ற மாவட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஓரே நேரத்தில் வெளியேறியதால் ஈரோட்டி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. இதனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த வெளியூரை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் சனிக்கிழமை மாலை தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். ஒரே நேரத்தில் எல்லோரும் புறப்பட்டதால் ஈரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

உச்ச கட்ட பிரசாரம்
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டனர். கடந்த சில தினங்களாக உச்ச கட்ட பிரசாரம் நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

ஈரோட்டில் குவிந்த அரசியல் கட்சியினர்
இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அந்த கட்சிகளின் மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேபோல், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் அரசியல் கட்சியினர் நடமாட்டம் தென்பட்டது என்று சொல்லும் அளவுக்கு அந்த தொகுதியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் குவிந்து இருந்தனர்.

6 மணியுடன் முடிந்த பிரச்சாரம்
மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓயந்தது. இதனால், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தங்கியிருக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த வெளியூரை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் நேற்று மாலை தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். அதுமட்டுமின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

எந்த சாலையில் பார்த்தாலும்
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரே நாளில் முகாமிட்டதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. முக்கிய சாலைகள், வீதிகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. எந்த சாலையில் பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அரசியல் கட்சி கொடி கட்டிய கார்கள் சாரை சாரையாக சாலைகளில் அணிவகுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியேறியதை காண முடிந்தது. வெளியூரை சேர்ந்தவர்கள் பேருந்துகளிலும் சென்றதால், இரவு வெளியூருக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.












Click it and Unblock the Notifications