விஜய் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ திடீர் மயக்கம்.. உடனே பறந்த ஆம்புலன்ஸ்!
ஈரோடு: தவெக விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல் பணிக்கு வந்த உதவி ஆய்வாளர் முத்துசாமி என்பவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரச்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. விஜய்யின் பிரசார நிகழ்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி கடும் கட்டுப்பாடுகளுடன் உள்ளரங்கில் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து புதுச்சேரியில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது முதல் பொதுக்கூட்டத்தை தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே இன்று நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக காவல் துறை சார்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. காவல்துறை விதித்த நிபந்தனைகளின்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட் முன்னாள அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால், இந்தக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
செங்கோட்டையன், தவெகவின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்றைய பிரச்சாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் மேற்கொண்டார்.
இன்று நடைபெறும் கூட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க, விஜய் பிரச்சாரம் செய்யக்கூடிய இடத்தில் 72 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுகளிலும் 400 நபர்கள் நின்று விஜய் பிரச்சார வாகனத்திலிருந்து பேசுவதை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொதுகூட்ட மேடையை சுற்றியும் தவெக கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மைதானத்தில் விஜய்யின் பரப்புரை வாகனத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே 50 மீட்டர் இடைவெளியுடன், 4 தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜய் பரப்புரைக்காக 1797 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை முதலே கூட்டம் நடைபெறும் இடத்தில் இந்நிலையில், தவெக விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல் பணிக்கு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துசாமி என்பவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு கூட்ட திடலில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications