பிச்சை கேட்பது போல 3-வது முறையாக ஓட்டு கேட்கிறோம்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீமான் பிரசாரம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 3-வது முறையாக பிச்சை கேட்பது போல ஓட்டு கேட்கிறோம்; நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையாவது வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று பிரசாரம் செய்த சீமான் பேசியதாவது: திராவிடனுக்கு ஒரு பெரியார்.. தமிழருக்கு ஓராயிரம் பெரியார் உள்ளனர். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நான் எதிர்த்த பின்னர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். இப்போது டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு உரிமை கோருகிறார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் சிங்கள கடற்படை ஒரு தமிழ்நாட்டு மீனவனைக் கூட தொட முடியாது.. அப்படியும் தொட்டுத்தான் பார்க்கட்டும்.. என்ன நடக்கும் என்பது அப்போது தெரியும்....
ஈரோடு பகுதியில் வேளாண் தொழிலும் நெசவுத் தொழிலும் நலிவடைந்துவிட்டது. இங்கே நாங்கள் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை. உங்கள் வாழ்க்கைக்காகவும் வந்துள்ளோம்.
100 நாள் வேலை திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. நாடே கடனில் இருக்கும் போது வேலையே செய்யாமல் இருப்பவர்களுக்கு எதற்காக சம்பளம் தர வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்?
தமிழ்நாட்டுக்குள் இந்தி மொழி பேசுகிறவர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.. அவர்களுடன் இந்தி மொழி மட்டுமல்ல.. அவர்களது பண்பாடும் கலாசாரமும் படையெடுத்து வருகிறது.. அவர்கள் இந்தி மொழியை கற்கவில்லை.. நம் மக்களிடம் இந்தி மொழியில்தான் பேசுகின்றனர். திருப்பூர், ஈரோட்டில் அரசியல் அதிகாரம் அவர்கள் வசம் போய்க் கொண்டிருக்கிறது.
இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் 3-வது முறையாக பிச்சை கேட்பது போல ஓட்டு கேட்டு வந்துள்ளோம். மீண்டும் மீண்டும் பிச்சை கேட்பது போல் கேட்பதற்காகவாவது எங்களுக்கு இந்த முறை மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இலவச செல்போன், சிம் கார்டு, ரீ சார்ஜ் செய்வோம் என்றெல்லாம் வெற்று வாக்குறுதி கொடுத்து வாக்கு கேட்பார்கள்; ஆனால் சொன்னது எதனையும் அவர்கள் செய்யப் போவதும் இல்லை. நாங்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்த வந்தவர்கள். இவ்வாறு சீமான் பிரசாரம் செய்தார்.












Click it and Unblock the Notifications