7 மணி நேரம் நீடித்த இபிஎஸ் ஆலோசனை.. இறுதிப்பட்டியலில் வந்த 6 பேர்.. அதிமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு?
ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் 7 மணி நேரத்திற்கு பின் நிறைவடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியில் தங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் அனலை கிளப்பி வருகிறது. திமுக கூட்டணி தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஆனால் அதிமுக தரப்பில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் சார்பில் தனித் தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணியினரும் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதில் மும்முரமாக இருந்து வருகின்றனர்.

தேர்தல் பணிக்குழு
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேவி ராமலிங்கம், தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளார். இதனால் இபிஎஸ் அணியின் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு வந்த இபிஎஸ்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று காலை ஈரோடு மாவட்டம் வந்தார். பவானி நசியனூரில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த பின், வில்லரசம்பட்டி அருகே உள்ள தனியார் விடுதிக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

நாளை வேட்பாளர் அறிவிப்பு?
இதில் பூத் கமிட்டி, தேர்தல் வெற்றி வியூகங்கள், பிரசார யுக்தி குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நாளை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா, விடியல் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

ஆர்வம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். அதற்கேற்ப பிரம்மாண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்ததுடன், அடுத்தடுத்து ஆலோசனை கூட்டம், வேட்பாளர் தேர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் வேட்பாளர் யார் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 மணி நேரம் ஆலோசனை
இந்த நிலையில் 7 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட 6 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதில் இறுதியாக யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்தல் வியூகங்களும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications