ஈரோடு தோட்டத்து வீட்டில் பகீர் சம்பவம்.. வயதான தம்பதியை அடித்து கொன்று நகைகள் கொள்ளை.. நடந்தது என்ன?
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி தனியாக வசித்து வந்த நிலையில், அவர்களை அடித்துக் கொலை செய்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விலாங்காட்டு வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (60). இவர்களுக்கு கவிசங்கர், பானுமதி என்ற மகள், மகன் உள்ளனர். ராமசாமியும், அவரது மனைவியும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.

ராமசாமியின் மகன் கவிசங்கர் செல்போன் மூலம் தனது தந்தைக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் செல்போனை எடுக்காமலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அருகில் இருக்கும் உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்க கூறியுள்ளார் கவிசங்கர். வீட்டில் துர்நாற்றம் வீசியதால் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இத்துக்கு காவல் துறையினர் வந்து பார்த்தபோது ராமசாமி, பாக்கியம் இருவரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த 15 சவரன் நகைகள் கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
காவல் துறை கண்காணிப்பாளர் சுஜாதா விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, போலீஸார் தம்பதியரின் உடல்களை கைப்பற்றி, இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் மோப்பநாய் பிரிவினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் நகைகளுக்காக தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களை குறிவைத்து கடந்த 2020 முதல் 2023 ஆம் ஆண்டுகள் வரை தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுபோன்று மீண்டும் நடந்திருப்பது ஈரோடு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications