"ஓவர் வெயிலா இருக்கே.." கதவை திறந்து வைச்சது குத்தமா! ஈரோட்டில் தங்க நகைகளை அபேஸ் செய்த கொள்ளையர்கள்
ஈரோடு: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதைப் பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
கோடை வெயில் இப்போது நம்மைப் பாடாய் படுத்தி வருகிறது. பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்லவே பல முறை யோசிக்க வேண்டி உள்ளது.
கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்தாலும் கூட சில இடங்களில் வெப்பம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியே பதிவாகி வருகிறது.
ஈரோடு: இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களால் வீடுகளில் கூட தூங்க முடியாத சூழலே இருக்கிறது. இதனை பயன்படுத்தி சில குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஈரோட்டில் நடந்துள்ளது. ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசு.

பால் வண்டி டிரைவராக இருக்கும் தமிழரசுக்கு சுமதி என்ற மனைவியும், கவின்ராஜ் (32), அபிராமி என்ற பிள்ளைகளும் உள்ளனர். இதில் கவின்ராஜ் கோத்தகிரியில் நில அளவையாளராகப் பயிற்சி பெற்று வருகிறார். முத்தம்பாளையம் பகுதியில் கவின்ராஜ் வாடகை வீடு ஒன்றை எடுத்தே வசித்து வருகிறார். கீழ்த்தளத்தில் உரிமையாளரும், முதல் மாடியில் கவின்ராஜும் வசித்து வருகின்றனர்.
கொள்ளை: நேற்றிரவு வேலையை முடித்துக் கொண்டு அவர்கள் வழக்கம் போலப் படுத்துள்ளனர். கோடைக் காலத்தில் அனலாக இருந்ததால் அவர்களால் தூங்க முடியவில்லை. ஹாலில் கவின்ராஜ், தமிழரசு, அபிராமி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். வெப்பம் அதிகமாக இருக்கவே சுமதி தூக்குவதற்கு மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். இருப்பினும், மேலே செல்லும் போது தூக்கத்தில் அவர் கதவை தாழிட மறந்ததாகத் தெரிகிறது.
இதைச் சாதமாகப் பயன்படுத்திய மர்ம நபர்கள் நள்ளிரவு கவின்ராஜ் வீட்டிற்குள் நுழைந்தனர். ஹாலில் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போதிலும், அவர்களுக்குச் சத்தம் கேட்காத வகையில் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், சாவியை எடுத்து பீரோவை திறந்துள்ளனர். உள்ளே இருந்த 11 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் ரொக்க பணம் சத்தமின்றி கொள்ளையடித்துச் சென்றனர். அது மட்டுமின்றி வீட்டில் இருந்து விலையுயர்ந்த மொபைல்களையும் எடுத்துச் சென்றனர்.

புகார்: காலையில் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த கவின்ராஜ் எழுந்துள்ளார். அப்போது தனது மொபைல் வைத்த இடத்தில் இருக்கவில்லை. கை மறதியாக வேறு இடத்தில் வைத்திருப்போம் என நினைத்து அவர் தேட தொடஹ்கிய போது தான், வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடப்பதை உணர்ந்துள்ளார். இதனால் பதறியடித்து கொண்டு பீரோவை பார்த்த போது, அது திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே இருந்த நகை, பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கவின்ராஜ் ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடிய போதிலும் எதுவும் செய்யவில்லை.. இதையடுத்து சம்பவ இடத்திற்குக் கைரேகை வல்லுநர்களை அழைத்தும் போலீசார் தடயங்களைச் சேகரித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், அங்குள்ள சிசிடிவி. கேமரா காட்சிகளையும் வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications