பொழப்பு நாசமாச்சு.. தென்னரசை திணறடித்த ஈரோடு வியாபாரிகள்! கும்பிடு போட்டு அதிமுக வேட்பாளர் “எஸ்கேப்”
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வாக்கு சேகரிக்க சென்றபோது அவருக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு வாக்கு சேகரிக்க சென்றபோது அவருக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வியாபாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிமுக வேட்பாளர் அங்கிருந்து சென்றார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுக வேட்பாளர்கள்
நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவர் அதிமுக தொடர்களுட ஈரோடு கிழக்கு தொகுதி எங்கும் வீடு வீடாக, கடை கடையாக சென்று மக்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

வியாபாரிகள் எதிர்ப்பு
இந்த நிலையில் அப்பகுதியில் இருக்கும் காய்கறி சந்தைக்கு வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.வி. சாலையில் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு நூற்றுக்கனக்கான வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்து வந்தார்கள்.

ஆர்.கே.வி. சாலை சந்தை
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக கே.எஸ்.தென்னரசு இருந்தபோது, இட நெருக்கடி காரணமாக இந்த காய்கறி சந்தையை ஆர்.கே.வி.சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த சந்தை வ.ஊ.சி. பூங்கா மைதானத்திற்கும் மாற்றப்பட்டது.

கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?
கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு மீண்டும் இந்த காய்கறி சந்தையை பழைய இடத்திற்கே மாற்றித் தருவதாக கூறி அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வியாபாரிகளிடம் உறுதியளித்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எம்.எல்.ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசுவும் இதேபோல் வியாபாரிகளிடம் உறுதியளித்து இருந்தார்.

வியாபாரிகளின் தொடர் கோரிக்கை
ஆனால், வியாபாரிகள் வ.உ.சி. பூங்கா திடலில் கடைகளை அமைத்ததற்கு பிறகு ஆர்.கே.வி. சாலையில் அமைந்து இருந்த பழைய சந்தை முற்றிலுமாக இடிக்கப்பட்டது. அந்த பகுதியில் வணிக வளாகம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பழைய இடத்திற்கே காய்கறி சந்தையை மாற்றித்தர வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

சரமாரி கேள்வி
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு காய்கறி சந்தைக்கு சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தபோது, அவருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்தை இடம் மாற்றம் செய்யப்பட்டதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய வியாபாரிகள், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

திரும்பி சென்ற தென்னரசு
இதனால் அதிமுகவினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வியாபாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத அதிமுக வேட்பாளர் தென்னரசு கை எடுத்து கும்பிட்டபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதிமுக வேட்பாளரிடம் வியாபாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications