43 நிபந்தனைகளை விதித்த ஈரோடு காவல் துறை! மீற மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தவெக!
ஈரோடு: ஈரோடு பொதுக் கூட்டத்தில் நிபந்தனைகளை மீறமாட்டோம் என தவெகவினர் காவல் துறையிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 95 நாட்கள் இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் தவெகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

வரும் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள சரளை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அந்த பகுதியில் சுங்கச்சாவடி அருகே 26 ஏக்கர் நிலத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
300-க்கும் மேற்பட்டோர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மேற்பார்வை செய்து வருகிறார்.
இந்த கூட்டம் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இதற்காக 43 நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது.
அதாவது தேசிய நெடுஞ்சாலையில் மக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது. அங்கு தொண்டர்கள் நிற்கக் கூடாது. சர்வீஸ் சாலையில் இருந்து வலது புறம் சுமார் 250 அடி தூரம் இடைவெளிவிட்டு நிகழ்ச்சிக்கான தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
பிரச்சார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே பரப்புரையின் போது இருக்க வேண்டும். விஜய்யின் பிரச்சார வாகனத்தை சுற்றி 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.
கட்சியினர் உள்ளே வரும் போது தள்ளுமுள்ளு ஏற்படக் கூடாது. வரிசையாக அனுமதிக்க வேண்டும். இரும்பு பாக்ஸ்களை அமைக்க வேண்டும். அதில் 80 சதவீதம் மட்டுமே அனுப்ப வேண்டும். அதாவது 500 பேர் நிற்க முடியும் பாக்ஸில் 400 பேரை மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு பாக்ஸிலும் குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ அவசர நிலை ஏற்படும் போது சிகிச்சை பெறுவதற்கு அருகே எத்தனை மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கிறது என்ற விவரங்களை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர தனிவழி விட வேண்டும். சிசிடிவி கேமராக்கள், எல்இடி திரைகள் அமைக்க வேண்டும். டிரோன் கேமரா Operator பற்றிய விபரங்கள் மற்றும் நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள். முதியவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்க்கும் விதமாக, முன்னரே தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகங்கள் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.
அது போல் பட்டாசு, ஆயுதங்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துவர அனுமதி இல்லை. பட்டாசு வெடிக்கவும் அனுமதி இல்லை. மின்கம்பம், மரங்கள், கட்டடங்கள், விளம்பர பதாகைகள் மீது யாரும் நிற்க கூடாது.
காலை 11 மணிக்கு வெயில் என்பதால் மேற்கூரை போட வேண்டும். தவறினால் அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு என்பன உள்ளிட்ட 43 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த நிபந்தனைகளை மீற மாட்டோம் என காவல் துறையிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய காவல் துறை அறிவுறுத்தலின்பேரில் தவெகவினர் பிரமாண பத்திரத்தை வழங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications