ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு.. ரூ.1 லட்சம் பணம் கட்டிய தவெக.. உடனே அனுமதி கொடுத்த காவல்துறை!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடைபெறவுள்ள 31 ஏக்கர் நிலத்திற்கு ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்திய பின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று விஜயபுரி அம்மன் கோயில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் அளித்திருந்தார். இதையடுத்து தவெக சார்பாக டெபாசிட் மற்றும் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்திய பின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் சுமார் ஒரு மாதமாக தலைமறைவாகினர். இதையடுத்து தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற சூழலில், திடீரென செங்கோட்டையன் இணைந்தார். இதன்பின் தவெக மீண்டும் தீவிரமாக செயல்பட தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே காஞ்சிபுரத்தில் விஜய்யின் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு கூட்டத்தை தவெக நடத்தியது.

இதையடுத்து புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்தை நடத்தியது. இந்த நிலையில் அடுத்ததாக செங்கோட்டையனின் சொந்த மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஜய்யின் பிரச்சாரத்திற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துரை அருகில் விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் உள்ள சரளையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 31 ஏக்கர் கொண்ட நிலத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டது. இதையடுத்து காவல்துறையினரிடம் தவெக சார்பாக அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்டது. இதன்பின் போலீசார் 81 கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து காவல்துறையின் கேள்விகளுக்கு தவெக நிர்வாகி செங்கோட்டையன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார்.
இதனிடையே தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள 31 ஏக்கர் நிலம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று விஜயபுரி அம்மன் கோயில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள டெபாசிட் மற்றும் கட்டணமாக ரூ.50 ஆயிரம் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல் சரளையில் உள்ள 31 ஏக்கர் நிலத்தையும், ஏற்பாடுகளையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார். இதன்பின் தவெக தலைவர் விஜய் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தவெகவினர் விஜய் பிரச்சாரத்திற்கான பணிகளை வேகப்படுத்தி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications