டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. செங்கோட்டையன் பேட்டி!
ஈரோடு: டிசம்பர் 18ஆம் தேதி விஜய் ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 18ஆம் தேதி விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், காலை 11 முதல் 1 மணி வரை நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு கூட்டத்தில் மக்களை சந்தித்த விஜய், புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் அடுத்ததாக தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகி செங்கோட்டையன் மேற்கொண்டு வந்தார். முதலில் டிசம்பர் 16ஆம் தேதி விஜய்யின் பிரச்சாரத்திற்கு திட்டமிட்ட போது, காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில் 81 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவே 2 நாட்களாகும் என்பதால், விஜய்யின் ஈரோடு பயணத்தை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், ஈரோடு அருகே விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் சரளை என்ற இடத்தில் விஜய்யின் பிரச்சாரம் நடக்கவுள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பரளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் பிரச்சாரம் நடைபெறும்.
தவெக சார்பாக பொதுக்கூட்டம் நடத்த எந்தத் தடையும் இல்லை. அதேபோல் நான் முழு விருப்பத்துடனே தவெகவில் இணைந்துள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்த போது, அதிமுகவில் எப்படி இருந்தேனோ, அப்படிதான் இப்போது தவெகவில் இருக்கிறது. கடுமையாக உழைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.
தவெக தலைவர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் தாராளமாக எங்களின் கூட்டணிக்கு வரலாம். யாருடன் கூட்டணி, எந்தக் கட்சிகளை சேர்க்கலாம் என்பதையெல்லாம் விஜய் தான் முடிவு செய்வார். தற்போது தவெக பொதுக்கூட்ட ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications