விஜய் பெருந்துறை விசிட்.. ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவி.. கோவை டூ ஈரோடு பாதுகாப்பு.. என்ன நடக்கிறது?
ஈரோடு: தமிழக முதலமைச்சர் பெருந்துறை அருகே நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, 13 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக விஜய் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை ஏர்போர்ட்டில், அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு புறப்பட்டார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
முதல்வர் விஜய் பயணிக்கும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடாத வகையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை விமான நிலையம் முதல் நீலம்பூர் வரையிலான பகுதிகளிலும் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் போலீசார் நேற்று இரவே வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கோவை மாநகர ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர், ஹோம் கார்டு பிரிவினர் மற்றும் சிறப்புப் படையினர் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெருந்துறையில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இன்று மாலை சுமார் 5 மணியளவில் மீண்டும் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வரும் முதல்வர் விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.
பெருந்துறை நிகழ்ச்சி
முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி முதலில் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கு மேடை அமைக்கும் பணிகள், ஹெலிபேடு அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
ஆனால், நேற்று திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டது. கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி, காஞ்சிக்கோவில் லட்சுமி நாராயணா திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆகியோர் புதிய இடத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டாலும், முதல்வரின் சாலைப் பயணத்தில் மாற்றம் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, முதல்வர் வருகையை முன்னிட்டு 4,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகளிருக்கு ரூ.1,110 கோடி
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதில் வங்கிக் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் இடம்பெறுகின்றன. மொத்தம் ரூ.1,110 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5,000 பயனாளிகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்பெற உள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறவும், தங்களது தொழில்களை விரிவுபடுத்தவும் உதவும் வகையில் இந்த கடனுதவிகள் வழங்கப்பட உள்ளன.
இதுதவிர, ஈரோடு மாவட்டத்தில் முடிவடைந்துள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் அரசு திட்டப் பணிகள் தொடக்க விழாவும் நடைபெற உள்ளது.
செங்கோட்டையன் விளக்கம்
முன்னதாக, பெருந்துறையில் விஜய் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி இடைத்தேர்தலை மனதில் வைத்து நடத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு செங்கோட்டையன், "முதலமைச்சர் விஜய் பெருந்துறைக்கு வருவது இடைத்தேர்தலுக்காக கிடையாது, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மகளிரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் 13 மாவட்டங்களை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.. முதலமைச்சர் எங்கு சென்றாலும் பொதுமக்கள் அவரை காண வருவார்கள், முதலமைச்சர் வருகையே ஒரு ரோடு ஷோ போலத்தான்" என்று செங்கோட்டையன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
