ஹைதராபாத் "வுமன்ஸ் ஹாஸ்டலில்" நள்ளிரவு கருமுட்டை மோசடி.. ஹார்மோன் ஊசிகள் மூலம் பகீர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஒரு பெண்ணின் கருமுட்டையை தானமாக பெறுவதற்கு வயது, உடல்நிலை உள்ளிட்ட சில விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், ஹைதராபாத்தில் நடந்துள்ள ஒரு மோசடியில் பெண்களின் சாதி, மதம், நிறம், உயரம், படிப்பு தகுதி போன்றவற்றை பார்த்து கருமுட்டைகள் தேர்வு செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வாட்ஸ்அப் மூலமாகவே ஒரு நெட்வொர்க் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடி எப்படி நடந்தது? பின்னணி விவரங்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்...!!!

இந்தியாவில் பணம் வாங்கிக்கொண்டு வணிக ரீதியாக கருமுட்டை தானம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கருமுட்டை தானம் வழங்குவதற்கும் சில நடைமுறைகள் உள்ளன..

Hyderabad Egg Donation Scam Illegal Egg Donation Hyderabad Crime News

கருமுட்டை தானம்

குறிப்பாக கருமுட்டை தானம் வழங்குபவர்கள் 23 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே திருமணமாகி, குறைந்தது 3 வயதான ஒரு குழந்தையை பெற்றிருக்க வேண்டும். ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருமுட்டை தானம் செய்ய முடியும். அதுவும் அதிகபட்சமாக 7 கருமுட்டைகள் மட்டுமே வழங்க முடியும்.

கருமுட்டை தானம் வழங்குபவர் மற்றும் அதைப் பெறுபவரின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். கருமுட்டை தானம் மூலம் பிறக்கும் குழந்தைக்கு, தானம் வழங்கிய பெண் எந்தவொரு உயிரியல் அல்லது சட்டப்பூர்வ உரிமையும் கோர முடியாது. இதுபோன்ற விதிகள் நாடு முழுவதும் அமலில் உள்ளன.

சாதி, மதம் பார்த்து தேர்வு

இந்த அளவுக்கு விதிகள் நடைமுறையில் உள்ளபோதும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கருமுட்டை வைத்து அக்கிரமம் நடந்துள்ளது.. மல்காஜ்கிரி பகுதியில் சட்டவிரோத கருமுட்டை தானம் மற்றும் விற்பனை தொடர்பான கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் பிரகாஷ் நகர், எர்ரகட்டா, கோபாலபுரம், பேகம்பேட், சரூர்நகர் உள்ளிட்ட இடங்களில் மல்காஜ்கிரி கமிஷனரேட்டின் சிறப்பு நடவடிக்கைக் குழுவும் உள்ளூர் போலீசாரும் இணைந்து சோதனை நடத்தியிருக்கிறார்கள்... இந்த சோதனையில், பெண்களை அழைத்து வந்து கருமுட்டை பெறும் நடைமுறைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் கும்பல் சிக்கியது.

இந்த நடவடிக்கையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 48 பெண்கள் மீட்கப்பட்டதாகவும், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அவர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோதுதான் பெண்களைத் தேர்வு செய்த விதம் குறித்த பல தகவல்கள் வெளியாகி, போலீசாரையே அதிர வைத்துவிட்டது.

ஹைதராபாத் பெண்கள்

அதாவது, கருமுட்டையைப் பெற விரும்பும் குடும்பங்கள், தங்களுக்கு எந்த மாதிரியான பெண்ணின் கருமுட்டை வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்வார்களாம். குறிப்பாக, அந்த பெண்ணின் சாதி, மதம், நிறம், உயரம், படிப்புத் தகுதி, எந்த பகுதியைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களின் அடிப்படையில் தேர்வு நடந்துள்ளது.

உயர் சாதியை சேர்ந்த பெண், குறிப்பிட்ட நிறம் கொண்ட பெண், நல்ல உயரம் உள்ளவர், நன்றாகப் படித்தவர் என தங்களுக்கு தேவையான தகுதிகளைச் சொல்லி கருமுட்டையை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கேட்பார்களாம்.

முக்கியமாக, பெண்களின் நிறம் மற்றும் அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இத்தகைய குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட பெண்களின் கருமுட்டைகளுக்கு அதிக விலையும் பேசப்பட்டுள்ளது.

ஏஜெண்டுகளுக்கு பணம்

தாங்கள் கேட்கும் பெண்களை தேடிக் கண்டுபிடித்து கருமுட்டைகளை பெற்றுக் கொடுக்கும் வேலையில் ஏஜெண்டுகள் ஈடுபட்டுள்ளனர். எந்த மாதிரியான பெண்ணின் கருமுட்டை தேவைப்படுகிறது என்ற விவரத்தைப் பார்த்து, அதற்கேற்ற பெண்களை ஏஜெண்டுகள் தேடியுள்ளனர். குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட பெண்களின் கருமுட்டைகளுக்கு அதிக கிராக்கி இருந்ததாகவும், அவை அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணத்தேவை உள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை அணுகி, ஆசைவார்த்தை கூறி இந்த வலையில் சிக்க வைத்துள்ளனர். இதற்காக புரோக்கர்கள் மூலம் பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஹைதராபாத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பணம், நிறம், சாதி

இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமித் சர்மா, லேடீஸ் ஹாஸ்டல் என்ற பெயரில் ஏற்பாடுகளை செய்துள்ளார். மேற்கு வங்கம், சத்தீஸ்கர், டெல்லி, அசாம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா என 7 மாநிலங்களிலிருந்து பெண்கள் ஹைதராபாத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கொடுப்பதாகக் கூறியுள்ளனர். சில பெண்களுக்கு ரூ.50,000 வரை வழங்குவதாகவும் ஆசை காட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அமித் சர்மா கடந்த 2 வருடங்களாக பிரகாஷ் நகரில் மாதம் ரூ.50,000 வாடகையில் வீடு எடுத்து இந்தச் செயல்பாடுகளை நடத்தி வருகிறாராம்.

இதனிடையே, பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் Humog HP ஊசிகள் செலுத்தப்பட்டதும் போலீசாரின் சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், சிரிஞ்சுகள், Primolut, Mepred மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல பெண்களின் ஆதார் அட்டைகள், ஒப்புதல் படிவங்கள், மருத்துவப் பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டனவா என்றும் விசாரணை நடைபெறுகிறது.

48 பெண்கள் மீட்பு

முறையான மருத்துவக் கண்காணிப்பு இல்லாமலும், மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான விதிகளைப் பின்பற்றாமலும் இந்த செயல்பாடுகள் அனைத்துமே நடந்துள்ளதாம்.. இப்போது இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 48 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். .

மீட்கப்பட்ட பெண்கள் இதற்கு முன்பும் கருமுட்டை தானம் செய்துள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல், இந்த மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 23 IVF சிகிச்சை மையங்களுக்கும், கருமுட்டை தான ஏஜெண்டுகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மோசடியின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, மேலும் எத்தனை பெண்கள் இதுபோன்று பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வுமன்ஸ் ஹாஸ்டல் - கைது

இதனிடையே, ஹைதராபாத்தில் உள்ள வெங்கடேஸ்வரா காலனியில் செயல்பட்டு வந்த ஷெட்டி வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல் மூலமாகத்தான் இந்த மோசடி குறித்து போலீசாருக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது.

இந்த விடுதியை துர்கா பிரசாத் என்பவர் நிர்வகித்து வந்துள்ளார். அங்கு பெண்களைத் தங்க வைத்து சட்டவிரோதமாக கருமுட்டை தானம் செய்யும் நடவடிக்கைகள் நடந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மொத்தம் 9 பேர் கைது

இந்த வழக்கில் ஹாஸ்டல் ஓனர் துர்கா பிரசாத் உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 15 பெண்களை ஒவ்வொரு கருமுட்டை தான சுழற்சிக்கும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை பணம் தருவதாகக் கூறி ஹைதராபாத்துக்கு அழைத்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஹார்மோன் ஊசிகள், மாத்திரைகள், சிரிஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் ஆய்வுக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பெண்களுக்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டனவா, அவர்களிடம் இருந்து உண்மையிலேயே கருமுட்டைகள் எடுக்கப்பட்டனவா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், கருமுட்டை தானத்துக்கான முறையான ஒப்புதல் பெறப்பட்டதா, மருத்துவ விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதையும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.. கைப்பற்றப்பட்ட மருத்துவப் பொருட்களின் ஆய்வு முடிவுகள் வந்த பிறகே இந்த நடைமுறைகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவரும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+