ஓசூரில் விமான நிலையமா? அப்படி எந்த கோரிக்கையும் வரலையே.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்
ஓசூர்: பெங்களூருக்கு போட்டியாக ஓசூர் வளர்ந்து வரும் நிலையில், ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், இதற்கான எந்த முன்மொழிவும் மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய நகரங்களில் முக்கியமான நகரமாக ஓசூர் இருக்கிறது. பெங்களூரை ஒட்டி இருப்பதால்தான் நகரின் வளர்ச்சி வேகமாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது பெங்களூருக்கே டஃப் கொடுக்கும் வகையில் நகரின் வளர்ச்சி அசுர வேகத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், இதற்கு மேலும் உதவும் வகையில், ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "தொழில் தொடங்குவதற்காக உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சி அடைவதுடன், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக முன்னேறியுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக உள்ளது. புத்தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020-ல் கடைசியில் இருந்த தமிழகம், தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்துடன் முதலிடம் பெற்று உள்ளது.
நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை விரைவில் அடைய, தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உயர்ந்து வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களை பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தி துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. வேகமாக வளர்ந்துவரும் ஓசூரை, தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க, அங்கு நவீன உள்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆண்டுக்கு 3 கோடி பயணிகள்: அந்த வகையில், ஓசூருக்கான ஒரு புதிய பெருந்திட்டம் (Master Plan) தயாரிக்கப்பட்டு, நிறைவடையும் நிலையில் உள்ளது. ஓசூர் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது. எனவே, ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டங்கள், விமான நிலையத்திற்கான திட்ட செலவுகள் குறித்து ராஜ்யசபாவில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, விமான நிலையம் அமைப்பதற்கான முன்மொழிவு ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்று கூறியிருந்தார்.
அதாவது, "ஓசூரில் சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசிடமிருந்தோ அல்லது விமான நிலைய மேம்பாட்டாளரிடமிருந்தோ 2008ம் ஆண்டு கிரீன்ஃபீல்ட் விமான நிலையக் கொள்கையின் கீழ் எந்த முன்மொழிவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை" என்று கூறியிருந்தார். அதேபோல மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயக்க, விமான நிறுவனங்களிடமிருந்து முறையான கோரிக்கை எதுவும் கிடைக்கப்பெறவில்லை" என்றும் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த திட்டத்திற்கு இதுவரை முன்மொழிவு கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு சில வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, விண்ணப்பதாரர் அனுமதி பெறுவதற்கான வழிகாட்டல் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அல்லது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற் (DGCA) அனுப்பி வைக்கப்படும். இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் அதற்கான அறிக்கை குழுவிடம் சர்பிக்கப்படும் என்று துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications