ஓசூரில் தோண்ட தோண்ட தங்கம்.. ஓடி வந்த போலீஸ்.. கடைசியில் பார்த்தால் ஷாக்.. என்ன நடந்தது?
ஓசூர்: ஓசூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர வைடூரிய புதையல் எடுத்து தருவதாக கூறி 8 லட்சம் ரூபாயை ஏமாற்றிய 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாந்தபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்த ராதம்மா (46) இவரது கணவர் குள்ளப்பா. ராதம்மா அப்பகுதியில் கால்நடைகளை வளர்த்தும், பால் கறந்து விற்பனை செய்து வரும் நிலையில், ராதம்மாவுக்கு சொந்தமான நிலத்தில் ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை செய்து கோயிலை பராமரித்து வருகிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த லட்சுமிகாந்த் (54) என்பவர் வீட்டில் வாஸ்து பூஜை செய்து கொடுப்பதாக, ஒரு கும்பல் ஓசூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். இந்த கும்பலை லட்சுமிகாந்த் குள்ளப்பாவின் சகோதரர் கிஷோருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். இதனையடுத்து அந்த கும்பலை கிஷோர் தனது சகோதரர் குள்ளப்பா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற கும்பல் அஞ்சநேயர் கோயிலை சுற்றி பார்த்து விட்டு ராதம்மாவிற்கு கடவுள் அனுகிரகம் உள்ளது. எனவே வீட்டின் அருகே புதையல் உள்ளதாக கூறி சிறு பூஜை நடத்தி பூஜை செய்யும் நபர்களே மறைத்து வைத்திருந்த நிலத்திலிருந்து ஒரு சிறிய பானையில் இரண்டு தங்க காசுகள் புதையலாக கிடைத்துள்ளது என எடுத்து கொடுத்துள்ளனர்.
அதில் ஒரு தங்க காசு ராதம்மாவிடம் கொடுத்து விட்டு வேண்டுமென்றால் இதை பரிசோதித்துக் கொள்ளுங்கள் எனக்கூறி ராதம்மாவிடம் கொடுத்துள்ளனர் ராதம்மாவும் அவரது கணவருமான குள்ளப்பாவும் நாணயத்தை பெற்று கொண்டு அதை கடையில் சென்று சரி பார்த்துள்ளனர், தங்கம் என்று தெரிந்தவுடன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து உண்மையான புதையல் பூமியின் அடியில் தான் உள்ளது அது பெரிய புதையல் என்றும் அதற்கான பூஜை செலவிற்கு ரூ.4 லட்சம் மற்றும் நாங்கள் இங்கே தங்குவதற்கும், எங்கள் சாப்பாடு செலவுக்கும் - ரூ.4 லட்சம் என ரூ.8 லட்சத்தை ராதம்மாவிடம் வாங்கி உள்ளனர். இதனையடுத்து ராதம்மா வீட்டின் அருகே கடந்த 23-ம் தேதி பூஜை செய்து பூஜை செய்பவர்கள் மறைத்து வைத்திருந்த பானையை எடுத்து கொடுத்துள்ளனர்.
இந்த புதையல் இருக்கும் மண்பானைக்கு தினமும் பூஜை செய்து வர வேண்டும் என கூறி, பூஜை முடிவதற்குள் இதை திறந்து பார்த்தால் ரத்த வாந்தி எடுத்து இறந்து விடுவார்கள் என பயத்தை ஏற்படுத்தி உள்ளனர், மேலும் மேலும் நிலத்தின் நடையில் கிடைக்கும் புதையல் தமிழக அரசுக்கு சொந்தம் என்று அரசு அதிகாரிகள் எடுத்து சென்று விடுவார்கள் இதை யாரிடமும் கூறி விடாதீர்கள் என ராதம்மாவிடம் கூறிவிட்டு இந்த புதையலை வாங்குவதற்கு ஒருவர் ரூ.2.50 கோடி அட்வான்ஸ் எடுத்து வந்துள்ளார். அட்வான்ஸ் பணப் பெட்டியையும், புதையல் உள்ள பானையையும் பூஜைகள் முடிந்த பின் ஒரே நேரத்தில் திறக்க வேண்டும் என கூறி தொடர்ச்சியாக தினமும் பூஜை செய்து வந்துள்ளனர். சில நாட்கள் கழித்து மேலும் எங்களுக்கு பணம் தேவை என ராதம்மாவிடம் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராதம்மாவின் மகனுக்கு சந்தேகமடைந்து புதையல் இருப்பதாக கூறிய மண் பானை மற்றும் பணம் இருப்பதாக கூறிய பெட்டியை உடைத்து பார்த்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். புதையல் கிடைப்பதாக கூறி தங்களை ஒரு கும்பல் ஏமாற்றியதை அப்போது அவர்கள் உணர்ந்தனர். அதே நேரத்தில் புதையல் எடுக்கும் கும்பல் அடிக்கடி சென்று வந்த கார் ஓட்டுனருக்கு சந்தேகமடைந்து, அவசர உதவி எண் 100 க்கு தனது கைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார், அந்த தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி மூலமாக நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் காலை ஓசூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த 10 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் திருப்பூரை சேர்ந்த சசிக்குமார் (62), சங்கர்கணேஷ் (43), செல்வராஜ் (61), பழனியை சேர்ந்த பிரபாகர் (37), உடுமலைப்பேட்டையை சேர்ந்த சசிகுமார் (48), சேலம் குகையை சேர்ந்த ராஜ்குமார் (45), விருதாசலத்தை சேர்ந்த நடராஜன் (48), முத்துகுமரவேல் (48), விஜயவாடாவை சேர்ந்த பிரகாஷ்குப்தா (68) பெங்களூருவை சேர்ந்த லட்சுமி காந்த் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது












Click it and Unblock the Notifications