கழுதை பால் லிட்டர் ரூ.8 ஆயிரமாம்! தெலுங்கானாவில் சூடுபிடிக்கும் விற்பனை.. வரிசையில் நிற்கும் மக்கள்!
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தற்போது கழுதை பாலுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளது. இது ஒரு லிட்டர் ரூ.8,000 வரை விற்கப்படுகிறது. இருப்பினும் மக்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர்.
தென் மாநிலங்களில் கழுதை பால் மிகவும் சத்து மிக்கதாக கருதப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது கொடுக்கப்படுகிறது. வயிற்று மந்தம், வயிற்று வலி, சளி, இருமல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் கழுதை பால் குடித்தால் சரியாகிவிடும் என்று மக்கள் நம்புகின்றனர். எனவே இதற்கான ரேட்டு தாறுமாறாக அதிகரித்துள்ளது. ஹைதராபாத் மற்றும் தெலங்கானாவில் தற்போது இதற்கு கிராக்கி சூடுபிடித்துள்ளது. இங்கு ஒரு லிட்டர் கழுதை பால் ரூ.8,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கடந்த சில நாட்களாக நகர் பகுதிகளில் அதிகாலை வேலையில் கழுதைகளுடன் சிலரை நாங்கள் பார்த்தோம். தொடக்கத்தில் பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், பின்னர்தான் தெரிந்தது இங்கு கழுதை பால் விற்பனை செய்யப்படுகிறது என்று. ஆரம்பத்தில் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை லிட்டருக்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது இது ரூ.8,000 ஆக அதிகரித்துள்ளது. மக்களால் இவ்வளவு விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. எனவே 25 மில்லியை ரூ.200க்கு வாங்கி வருகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கழுதை பால் விற்பனையாளர்கள் கூறுகையில், "நாங்கள் வழக்கமாக குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தின் தொடக்கத்தில் விசாகப்பட்டினத்திற்கு வியாபாரத்திற்கு வருவோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாலின் விலையை அதிகரித்துள்ளோம். இப்போதெல்லாம் யாரும் கழுதைகளை வளர்ப்பது கிடையாது. இதற்கான தேவையே கிடையாது. இப்படி இருக்கும்போது ஏன் இதை வளர்க்க வேண்டும்? எப்படி பார்த்தாலும் இது எங்களுக்கு ஒரு பாரம்தான்.
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் அதிக விலைக்கு விற்பதை போல தெரியும். ஆனால், எங்களிடம் வாங்குபவர்கள் 25 மில்லி, ஒரு ஸ்பூன் அளவுக்குதான் பாலை வாங்குகிறார்கள். இதனால் ரூ.800லிருந்து ரூ.1,000 வரைக்கும் தான் வருமானம் கிடைக்கிறது. இது தவிர டவுனுக்குள் கொண்டு வரும்போது நாய்கள் தொல்லையை சமாளிக்க வேண்டி இருக்கிறது. சில நேரங்களில் சுகாதாரத்துறை அதிகாரிளும் சர்ச்சையை கிளப்புவார்கள். இதையெல்லாம் சமாளித்துதான் வாழ்ந்து வருகிறோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications