தெலுங்கானா முதல்வரை சந்தித்த அல்லு அர்ஜூனின் அப்பா! 'வாய்ப்பில்லை ராஜா' கறார் காட்டிய ரேவந்த் ரெட்டி!
ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜூனின் தந்தை உள்ளிட்டோர் இன்று தெலுங்கானா முதல்வரை சந்தித்திருக்கின்றனர். அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைக்கு முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் உயிரிழப்பை தொடர்ந்து அல்லு அர்ஜூனுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. உயிரிழந்த பெண்ணின் 9 வயது மகனும் ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காலை சுற்றும் பாம்பாக பெண் உயிரிழந்த வழக்கு அல்லு அர்ஜூனை சுற்றிக்கொண்டிருக்கிறது. அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த பின்னர் அவரை தெலுங்கு திரை நட்சத்திரங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இது தெலங்கானாவில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து பேசிய தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, “அல்லு அர்ஜூன் சில மணி நேரம் சிறையில் இருந்திருப்பார், அவ்வளவுதானே! ஆனால் ஏதோ கை, கால்கள் இழந்துவிட்டதை போல அவரை அனைவரும் நேரில் சென்று சந்தித்திருக்கிறீர்கள். உயிரிழந்த பெண்ணை நினைத்து பார்த்தீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மட்டுமல்லாது நான் முதல்வராக இருக்கும் வரை தெலங்கானாவில் சிறப்பு காட்சி திரையிடப்படமாட்டாது என்றும் கூறியிருந்தார்.
இப்படி இருக்கையில்தான் தெலுங்கு திரையுலகின் முன்னணி சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இன்று முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்திருந்தனர். இதில் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்தும் இருந்தார். பேச்சுவார்த்தையின்போது திரைத்துறையினர் பல்வேறு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். மிக முக்கியமாக அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கையை கைவிடுதல், சிறப்பு காட்சிக்கு மீண்டும் அனுமதி உள்ளிட்டவை குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு பதிலளித்திருந்த ரேவந்த் ரெட்டி, “எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சி அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. தெலுங்கு சினிமாவின் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்” என்று சிம்பிளாக பதில் சொல்லி முடித்திருக்கிறார். எனவே திரைத்துறையினர் பெறும் ஏமாற்றமடைந்துள்ளனர். தெலுங்கு திரை உலகை பொறுத்த வரை சினிமாவுக்கான சிறப்பு காட்சிதான் ஒரு திரைப்படத்தின் வெற்றி விழாவைப்போல கொண்டாடப்படுகிறது.
சிறப்புக் காட்சிக்கு எவ்வளவு ரசிகர்கள் வருகின்றனர்? எப்படியெல்லாம் சிறப்பு காட்சி கொண்டாடப்படுகிறது? என்பதை வைத்துதான் அந்த படம் மார்கெட்டில் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிறப்பு காட்சியே இல்லை என்றால், நாங்கள் என்ன செய்வது? எங்கள் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என்று துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications