பாசம் காட்டி மோசம்! சில்லி சிக்கன் வாங்கி கொடுத்த கணவன்.. ஆசையாய் சாப்பிட்ட மனைவி பரிதாப பலி.. சோகம்
ஐதராபாத்: பீரோவில் வைத்த பணத்தை மனைவி திருடியததாக சந்தேகப்பட்டு கட்டிய மனைவி என்றும் கூட பாராமல் சிக்கன் வறுவலில் விஷத்தை தடவி கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் கோட்டே முக்கால் என்ற பகுதியை சேர்ந்தவர் அனுமந்தராவ். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களுக்கு திருமணம் முடிந்தது. அனுமந்தராவின் தாயாரான சித்தேம்மா மற்றும் சகோதரர் கோடீஸ்வர ராவ் ஆகியோருக்கும் மனைவி ஜோதிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

அவ்வப்போது இவர்கள் இருவரும் தகராறு செய்து வந்தார்களாம். இந்த நிலையில், அனுமந்த ராவ் பீரோவில் வைத்து இருந்த பணம் திடீரன காணாமல் போய் இருக்கிறது. இதை தனது மனைவி தான் எடுத்து இருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட அனுமந்தராவ், மனைவியிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால், மனைவி ஜோதியோ தான் பணத்தை எடுக்கவில்லை என்று கூறினார்.
சிக்கன் வறுவலில் விஷம்: எனினும், மனைவியின் வார்த்தையை நம்பாத அனுமந்தராவ் தாலி கட்டிய மனைவி என்றும் பாராமல் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அனுமந்தராவ் கையாண்ட யுக்திதான் கொடூரத்திலும் கொடூரம். அதாவது தனது மனைவியை கொல்ல வேண்டும் என்பதற்காகவே ஓட்டலில் சிக்கன் வறுவல் வாங்கியிருக்கிறார். அதில் விஷத்தை தடவி மனைவி ஜோதியிடம் ஆசையாய் வாங்கி கொண்டு வந்தது போல கொடுத்துள்ளார்.
கணவர் தன் மீதான பாசத்தில் வாங்கி வந்து இருக்கிறாரே என்று பெருமை பட்டுக்கொண்ட மனைவி ஜோதியோ, கணவரின் விஷமத்தனம் தெரியாமல் சிக்கன் வறுவலை சாப்பிட்டுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே ஜோதிக்கு வாந்தி ஏற்பட்டது. தொடர்ந்து மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜோதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பலனின்றி மனைவி சாவு: இதற்கிடையே, இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு வந்த போலீசாரும் ஜோதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவர் அனுமந்தராவ் சிக்கன் வறுவல் வாங்கி கொடுத்ததாகவும் அதை சாப்பிட்ட பிறகே தனக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோதி இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஜோதியின் கணவர் அனுமந்தராவ், மாமியார் சித்தேம்மா மற்றும் கொழுந்தனார் கோடீஸ்வர ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சிக்கன் வறுவலில் விஷம் கலந்து கொடுத்து கணவனே கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications