நீ ஜெயிக்கணுமா.. தங்கை தேர்வெழுத உயிர்விட துணிந்த அண்ணன்கள்.. தோளில் சுமந்த ஆற்றை கடந்த நெகிழ்ச்சி
ஐதராபாத்: ஆந்திராவில் தங்கை தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக அவரை தோளில் சுமந்து சம்பாவதி ஆற்றில் ஓடிய கழுத்தளவு தண்ணீரை அண்ணன்கள் கடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணன்-தங்கை உலகில் உள்ள உன்னதமான உறவில் ஒன்றாகும். நன்கு கவனித்து பார்த்தால் அண்ணன், தங்கைக்கும், தங்கை அண்ணனுக்காகவும் பல விஷயங்களை விட்டு கொடுப்பது தெரியும்.
இந்நிலையில் தான் ஆந்திராவில் தங்கை தேர்வெழுத 2 அண்ணன்கள் தங்களின் உயிரை பணயம் வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

21 வயது இளம்பெண்
ஆந்திர மாநிலம் கஜபதி நகரம் மண்டல் அருகே உள்ள மாரிவலசா கிராமத்தை சேர்ந்தவர் டாடி கலாவதி (வயது 21). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் கிராமத்தை சூழ்ந்தது.

விசாகப்பட்டினத்தில் தேர்வு
மேலும் கிராமத்தையொட்டி ஓடும் சம்பாவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கிராமத்துக்கு வரும் பஸ் போக்குவரத்து தடைப்பட்டது. மாரிவலசா கிராம மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தான் டாடி கலாவதிக்கு தான் பணியாற்றும் நிறுவனத்தில் ப்ரோமோஷனுக்கான தகுதித்தேர்வு சனிக்கிழமை நடந்தது. இந்த தேர்வு விசாகப்பட்டினத்தில் நடந்தது.

அண்ணன்கள் உதவி
இதில் பங்கேற்க கலாவதி செல்ல வேண்டும். ஆனால் கிராமத்தை சூழ்ந்த வெள்ளம், சபர்மதி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து இல்லாததால் அவர் தேர்வு எழுத முடியாத நிலை இருந்தது. இதுபற்றி அவர் தனது அண்ணன்களிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் உதவி செய்ய முடிவு செய்தனர்.

வீடியோவுக்கு வாழ்த்து
அதன்படி அண்ணன்கள் இருவரும் சேர்ந்து தங்கை கலாவதியை தோளில் சுமந்து சம்பாவதி ஆற்றில் வேகமாக ஓடும் கழுத்தளவு தண்ணீரை போராடி கடந்தனர். ஆற்றின் மறுபுறம் சென்ற பிறகு கலாவதி உடையை மாற்றி பஸ் ஏறி விசாகப்பட்டினம் சென்றார். தற்போது தங்கை தேர்வெழுத அவரை தோளில் சுமந்து சம்பாவதி ஆற்றை கடக்க இரு அண்ணன்கள் உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பலரும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications