தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த தயாராகும் சந்திரபாபு நாயுடு மருமகள்.. பிராமணி அரசியல் பிரவேசம் ரெடி!
ஹைதராபாத்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நள்ளிரவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திரா அரசியல் சூடுபிடித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷும் குறி வைக்கப்பட்டுள்ளதால், சந்திரபாபு நாயுடுவின் மருமகள் பிராமணிக்கு பொறுப்பு கூடியுள்ளது. விரும்பியோ, விரும்பாமலோ, தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்தும் இடத்திற்கு வந்திருக்கிறார் நாரா பிராம்மணி.
சிக்கலில் தெலுங்கு தேசம் கட்சி: ஆந்திராவில் முதல்வராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் புகார் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு. அவருக்கு தொடர்ச்சியாக ஜாமீன் மறுக்கப்பட்டு வருவதால், தெலுங்கு தேசம் கட்சி அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில், சந்திரபாபு நாயுடு பொது வாழ்வில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சந்திரபாபு நாயுடுவுக்கு குறி: சந்திரபாபு நாயுடு சிறையில் இருக்கும் நிலையில், அவரது மகன் நாரா லோகேஷும் பைபர் நெட் ஊழல் வழக்கின் சுழலில் சிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சந்திரபாபு நாயுடுவின் மனைவி என் புவனேஸ்வரி மற்றும் மருமகளும் மகன் நாரா லோகேஷின் மனைவியுமான பிராமணி ஆகியோர் வெற்றிடத்தை நிரப்ப முயற்சிப்பார்கள் என்று தெரிகிறது.

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவின் நிலை என்ன என்பது அக்டோபர் 3ஆம் தேதி தெரியவரும். செப்டம்பர் 27 விசாரணையில், நீதிபதிகளில் ஒருவர் வழக்கிலிருந்து விலகினார். இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமான விஷயங்கள் நடக்குமா என்பது பெரும் கேள்விக்குறிதான். ஒருவேளை திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், புதிய வழக்குகளை அவர் சந்திக்க நேரிடும் என்பதே ஆந்திராவின் தற்போதைய அரசியல் சூழல்.

வழிநடத்தப்போவது யார்?: சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ் இருவரும் சுழலில் சிக்கியுள்ளதால், வரும் நாட்களில், தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு புவனேஸ்வரி மற்றும் பிரம்மணி வசம் சென்றுள்ளது. சந்திரபாபு நாயுடு விரைவில் சிறையில் இருந்து வெளியே வரவில்லை என்றால், புவனேஷ்வரி, கிருஷ்ணா மாவட்டத்தின் குடிவாடா தாலுக்காவில் உள்ள தெலுங்கு தேசம் மூத்த தலைவர் என்.டி.ராமராவ் பிறந்த இடமான நிம்மகுருவிலிருந்து, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பிறந்த திருப்பதி மாவட்டத்தில் உள்ள நாராவாரிபள்ளே வரை யாத்திரை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல, லோகேஷ் ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால், அவரது கணவருக்குப் பதிலாக யுவ கலாம் (இளைஞர்களின் குரல்) பாதயாத்திரையை முன்னெடுத்துச் செல்ல பிராமணி தயாராவார் எனத் தெரிகிறது. புவனேஸ்வரி மற்றும் பிராமணி இருவரும், சந்திரபாபு நாயுடு மற்றும் லோகேஷ் சார்பாக அரசியல் போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டாக் ஆரம்பம்: சந்திரபாபு நாயுடு மீதான ஜெகன் மோகன் அரசின் பழிவாங்கும் செயலை லோகேஷின் மனைவி பிராமணி விமர்சித்துப் பேசி வருகிறார். ஜெகன் தொழில் முதலீடுகளை ஈர்க்கத்தவறி மற்ற மாநிலங்களுக்கு தாரைவார்ப்பதாகவும், அவரது ஆட்சியில் வளர்ச்சி இல்லை என்றும் விமர்சித்தார். பிரிவினையால் அனைத்தையும் இழந்த மாநிலத்தில் இந்த நான்கு ஆண்டுகளில் ஜெகனால் தொடங்கப்பட்ட ஒரு உள்கட்டமைப்புத் திட்டம் கூட இல்லை என்றும் சாடியுள்ளார் பிராமணி.

ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்கள் லோகேஷ் மற்றும் அவரது தந்தை சந்திரபாபு நாயுடு பற்றி விமர்சிக்கும் போது வழக்கமான தொனியில் பிராமணியையும் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை வெளிப்படையாக அரசியல் ரீதியாக எந்த செயல்பாட்டிலும் இறங்காத பிராமணியை குறிவைத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது பொதுமக்களாலும் கவனிக்கப்படுகிறது.
யார் இந்த பிராமணி?: நாரா பிராமணி, நடிகரும் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணாவின் மகள். நாரா குடும்பத்தால் நடத்தப்படும் பால் மற்றும் பால் பொருட்கள் நிறுவனமான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு தலைமைப் பொறுப்பு வகித்து வருகிறார் பிராமணி. இதுவரை அரசியல் களத்தில் கால் வைத்திராத பிரம்மணி, சந்திரபாபு நாயுடுவின் கைதுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்தும் பேரணியில் பங்கேற்றார்.

சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டமும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர் பிராமணி. வயது 35. கள அரசியலில் எந்தவித முன் அனுபவமும் இல்லாதவர். சந்திரபாபு நாயுடுவும், அவரது மகனும் அரசியல் ரீதியாக குறிவைக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னணி தலைவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் பிரம்மணி.

காத்திருக்கும் சவால்: 2012 முதல் 16 மாதங்கள் ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் இருந்தபோது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை, ஜெகன் மோகனின் தாய் விஜயம்மாவும், சகோதரி ஷர்மிளாவும் தான் முன்னின்று நடத்தினார்கள். ஷர்மிளா 3,000 கிலோமீட்டர் நடைப்பயணத்தை மேற்கொண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைமை வெற்றிடத்தை நிரப்பினார். இப்போது அதே போன்ற நிலை சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
கட்சியை முன்னிறுத்தி, களத்தில் வேலை செய்வது தொடங்கி, தேர்தல்கள் நெருங்கும் சூழலில் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு, சீட் பகிர்வு உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் சந்திரபாபு நாயுடுவின் மருமகள் சமாளிப்பாரா, கட்சியை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வாரா என்பதே தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், அது சாதாரண விஷயம் இல்லை என்பது மட்டும் உறுதி.












Click it and Unblock the Notifications