'அரசியல் அமைப்பை பாதுகாக்க பாஜவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்' ஆவேசமடைந்த சீதாராம் யெச்சூரி
ஹைதராபாத்: அரசியல் அமைப்பை பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, அரசியல் அமைப்பை பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று பேசினார். மேலும் அவர் கூறியதாவது:-

ஆட்சி அதிகாரத்தில் இருந்து
இந்தியா மதச்சார்பற்ற நாடாகவும் ஜனநாயக குடியரசு நாடாகவும் தொடர வேண்டும் என்று விரும்பினால் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதேபோல், அரசியல் அமைப்பு மற்றும் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் கட்டாயம் இது நடந்தே தீர வேண்டும். விசாரணை அமைப்புகளை ஆளும் கட்சி தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய பாஜகவை அரசியல் அதிகாரத்தில் இருந்தும் வெளியேற்றுவது அவசியம்

லோக் தள் பேரணி
வருகிற 25 ஆம் தேதி இந்திய தேசிய லோக் தள பேரணி நடைபெற உள்ளது. அதேபோல், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். பொதுவான அஜெண்டாவுடன் மதசார்பற்ற கட்சிகளை ஒரணியில் திரட்டும் முயற்சியாக இது நடைபெற்று வருகிறது'' என்றார்.

ஆட்சிக்கு வர நினைக்கிறது
மேலும், ஐதராபாத் விடுதலையில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் கூறிய சீதாராம் யெச்சூரி, பாஜக வரலாற்றை திரித்து குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வர நினைப்பதாகவும், இதன் காரணமாகவே வரலாற்றை திரித்து வகுப்புவாதத்தை ஊக்கப்படுத்துவதாகவும்'' விமர்சித்தார்.

அமித்ஷா பேச்சு
முன்னதாக நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, ''நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் தீவிர முயற்சி மற்றும் நடவடிக்கைகளால் தான் ஐதாராபாத் மாகாணம் இந்தியாவில் இணைந்தது. நமது நாடு சுதந்திரம் அடைந்த போதும் கூட இந்தியாவுடன் சேர நிஜாம் மன்னர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தனர்'' என்று பேசியிருந்தார்.

பாஜகவுக்கு எதிராக கூட்டணி
வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிதிஷ் குமார், 'கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லியில் முகாமிட்டு எதிர்க்கட்சிகளின் தலைவ்ர்களை சந்தித்தார். ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரியையும் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒருங்கிணைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications