தெலுங்கானா MLA.. 10 நாட்களுக்கு முன்புதான் உயிர் தப்பினார்.. மீண்டும் விபத்தில் சிக்கி பலியான சோகம்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் லாஸ்யா நந்திதா. அடுத்த சில நாட்களில் மீண்டும் இன்று விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதி எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (37). பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் செகந்திராபாத் எம்.எல்.ஏவாக இருந்த சாயண்ணா மரணத்திற்கு பின் அவரது மகள் லாஸ்யா நந்திதா சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள படன்சேரு அருகே சுல்தான்பூர் ஓ.ஆர்.ஆர் பகுதியில் அம்மாநில பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்ஏவான லாஸ்யா நந்திதா காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பில் பயங்கரமாக மோதியது.
இதில், படுகாயமடைந்த எம்எல்ஏ லாஸ்யா நந்திதா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாஸ்யா நந்திதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாஸ்யா நந்திதா பசாராவில் இருந்து கட்சிபவுலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓட்டுநர் தூங்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காரின் முகப்புப் பகுதிக்கு மட்டுமே பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் எம்எல்ஏவின் தனிச் செயலரும் காயமடைந்துள்ளார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியன்று பி.ஆர்.எஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, நல்கொண்டாவில் இருந்து ஹைதராபாத்துக்கு திரும்பும்போது நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் சிறிய காயங்களுடன் லாஸ்யா நந்திதா உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த காவலர் ஒருவர் பலியானார். அடுத்த 10 நாட்களில் இன்று நடந்த இரண்டாவது விபத்தில் லாஸ்யா நந்திதா உயிரிழந்துள்ளது பி.ஆர்.எஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications