சீனா மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த தைரியம் இருக்கா? அமித்ஷாவுக்கு “சேலஞ்ச்” செய்த அசதுத்தீன் ஒவைசி
ஐதராபாத்: தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த தயாரா என்று ஐதராபாத் எம்பியும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான அசதுத்தீன் ஒவைசி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுத்து இருக்கிறார்.
கடந்த வாரம் தெலுங்கானாவுக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "டிஆர்எஸ் என்ற கார் தெலுங்கானா மாநிலத்தை ஆட்சி செய்கிறது. ஆனால் ஒவைசியின் கைகளில் அதன் ஸ்டீயரிங் உள்ளது.

மஜ்லிஸ் கட்சியின் கைகளில் ஸ்டியரிங் இருக்கும் அரசு தெலுங்கானாவில் ஒருகாலும் இயங்க இயலாது. மஜ்லிஸ் கட்சியை பார்த்து நாங்கள் அஞ்சவில்லை. பிஆர்எஸ் கட்சி மஜ்லிஸ் கட்சிக்கு முக்கியம். அது முக்கியம் கிடையாது. மக்களுக்காக தெலுங்கானா அரசு செயல்பட வேண்டும். ஒவைசிக்காக செயல்பட கூடாது." என்று விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அசதுத்தீன் ஒவைசி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை கடுமையாக விமர்சித்தார். அவர் உரையாற்றுகையில், "கோயில்களுக்கு பல கோடிக்கணக்கான நிதியை வழங்க தெலுங்கானா மாநில அரசு ஒப்புதல் வழங்கி வருகிறது.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ காரின் பிடி எனது கையில் இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார். என் கைகளில் ஸ்டீயரிங் இருந்தால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது? சர்ஜிகல் ஸ்டிரைக்கை பழைய நகரில் நடத்த உள்ளதாக சொல்கிறீர்கள். இதில் அவருக்கு என்ன வேதனை உள்ளது? உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனாவின் மீது சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்த இயலுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த பண்டி சஞ்சை, "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரோஹிங்யா வாக்களர்கள் இல்லாமல் ஐதராபாத் பெருநகர மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஐதராபாத் உள்ளாட்சி தேர்தலில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரோஹிங்யா வாக்களர்களின் உதவியுடன் ஒவைசி வெற்றி பெற முயற்சிக்கிறார்.
தேர்தலில் நாம் வென்ற பிறகு, அந்தப் பழைய நகரத்தின் மீது நாம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நடத்துவோம்" என்று பேசி இருந்தார். இந்த நிலையில் அதை சுட்டிக்காட்டி அமித்ஷாவுக்கு அளித்த பதிலில் சீனா மீது சர்ஜிகல் தாக்குதலை நடத்துங்கள் என்று ஒவைசி சவால் விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
