"வீட்டு சாப்பாடு, சிறையில் தனி ரூம்.." சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெயிலில் தரப்படும் சலுகைகள் என்னென்ன
ஹைதராபாத்: ஊழல் வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் அவருக்கு சில சிறப்பு வசதிகளும் தரப்பட இருக்கிறது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வெள்ளிக்கிழமை காலையில் போலீசார் கைது செய்தனர். சுமார் 300 கோடி ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு நேற்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், இதைக் கண்டித்து பலரும் ஆந்திராவில் போராட்டம் நடத்தினர். மேலும், இதைக் கண்டித்து இன்று ஆந்திர மாநிலத்தில் பந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பவன் கல்யாண் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த கைதை கண்டித்துள்ளனர்.
15 நாட்கள் நீதிமன்ற காவல்: இதற்கிடையே கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதேநேரம் சிறையில் அவருக்கு சில சிறப்புச் சலுகைகளை வழங்கவும் நீதிபதி அனுமதி அளித்தார்.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டில் சமைத்த உணவுகளை வழங்க அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், மருந்துகளை எடுத்துக் கொள்ள அனுமதி, ஒரு தனிச் சிறப்பு அறை எனப் பல சலுகைகளைத் தரப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு நீதிமன்றம் இது குறித்த உத்தரவுகளைப் பிறப்பித்தது. 73 வயதான சந்திரபாபு நாயுடுவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுவதைக் கருத்தில் கொண்டு அவரை சிறப்பு அறையில் தங்க வைக்க ராஜமகேந்திரவரம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடுவுக்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக அவர் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புப் பிரிவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சலுகைகள்: மேலும், வீட்டில் சமைத்த உணவு மற்றும் அவருக்குத் தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் அனுமதி கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடு மீதான குற்றச்சாட்டுகளை நம்பக் காரணங்கள் இருப்பதாகத் தெரிவித்த நீதிமன்றம், இருப்பினும் இந்த விசாரணையை முடிக்க 24 மணிநேரம் போதாது என்றும் நீதிபதி தெரிவித்தனர். மேலும், வரும் செப். 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
அங்கே மோசமான வானிலை நிலவும் நிலையில், பலத்த பாதுகாப்புடன் ஆந்திர முன்னாள் முதல்வர் விஜயவாடாவில் இருந்து ராஜமகேந்திரவரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜயவாடாவில் இருந்து இந்த சிறை சுமார் 200 கி.மீ. தொலைவில் இருக்கும் நிலையில், அவர் பலத்த கான்வாய் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
என்ன தவறு செய்தார்: சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், செய்யாத குற்றத்திற்காகத் தனது தந்தை அநியாயமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "எனது ரத்தம் கொதிக்கிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எல்லையே இல்லையா? தனது நாட்டிற்காகவும், மாநிலத்திற்காகவும், தெலுங்கு மக்களுக்காகவும் எவ்வளவோ செய்து கொடுத்த என் தந்தைக்கு இப்படியொரு அநீதி செய்துள்ளனர் " என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications