டிப்பர் லாரி மீது மோதிய அரசு பேருந்து.. 19 பேர் பலி! தெலங்கானாவில் ஷாக்!
ஹைதராபாத்: தெலங்கானாவில் டிப்பர் லாரி மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், செவெள்ளா அருகே உள்ள மிர்ஜாகுடா பகுதியில் இன்று அதிகாலை நடந்திருக்கிறது.
விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் சுமார் 40 பேர் பயணித்திருந்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த பேருந்து தண்டூரிலிருந்து செவெள்ளா நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. இப்பேருந்து இன்று அதிகாலை மிர்ஜாகுடா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியிருக்கிறது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுநர் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர். லாரி எதிர் திசையில் தவறான பாதையில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராஜேந்திரநகர் துணை ஆணையர் யோகேஷ் கௌதம் தெரிவித்திருக்கிறார்.
இந்த விபத்தில், லாரியிலிருந்த சரளை கற்கள் பேருந்துக்குள் விழுந்ததால், மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக பிஜாப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் ஹைதராபாத் கொண்டு வந்து உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டிருக்கிறார். விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு போக வேண்டும் என்றும் முதல்வர் தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.
அரசு பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications