பிரஷர் குக்கரில் வேக வைக்கப்பட்ட மனைவி! பிரபல மலையாள படம் பார்த்துதான் செய்ததாக கணவர் வாக்குமூலம்
ஹைதராபாத்: தெலங்கானாவில் மனைவியை கணவர் கொலை செய்து பிரஷர் குக்கரில் வேகவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த குற்றத்தை பிரபல மலையாள படத்தை பார்த்துதான் செய்ததாக கணவர் கூறியுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வேங்கடம் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), இவர் ஹைதராபாத்தில் DRDO-வில் காவலாளியாக வேலை பார்த்து வந்திருந்தார். இவருடைய மனைவியும் (லதா-பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), குழந்தையும் இவருடன் ஹைதராபாத்தில் தங்கியிருந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடும் பிரச்சனை எழுந்திருக்கிறது. இருவரின் குடும்பத்தினரும் அடிக்கடி எழும் சண்டையை சமாதானப்படுத்தி வந்திருக்கின்றனர்.

இப்படி இருக்கையில்தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் லதாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் லதாவை போலீசார் தேடியுள்ளனர். கணவர் வேங்கடத்திடமும் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். மறுபுறம் லதாவும் கிடைக்கவில்லை. எனவே, போலீசார் வேங்கடத்திடம் கிடுக்குபிடி விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்திருக்கிறது.
அதாவது கடந்த ஜன.16ம் தேதி லதாவுக்கும், வேங்கடத்திற்கும் இடையே சண்டை வெடித்திருக்கிறது. வழக்கமாக சண்டையாக இது முடிந்துவிடும் என்றுதான் அக்கம் பக்கம் இருந்தவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், அன்று அப்படி நடக்கவில்லை. மாறாக, வேங்கடம், லதாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் லதா உயிரிழந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத வேங்கடம், லதாவின் சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்திருந்திருக்கிறார்.
அந்த நேரத்தில்தான் மலையாளத்தில் கிரைம் திரில்லர் ஜானரில் பிரபல படம் ஒன்று வெளியாகியிருந்தது. அந்த படத்தில் ஒரு கொலையை மறைக்க, கொலையாளிகள் உடலை ஆசிடில் கரைப்பார்கள். இதே பானியில் வேங்கடம் தனது மனைவியின் உடலை சந்தேகம் இல்லாமல் அப்புறப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
திட்டமிட்டபடி உடலை பாத்ரூமில் வைத்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டியுள்ளார். வெட்டிய உடலிலிருந்து வெளியேறிய ரத்தம் அனைத்தையும் பாத்ரூமில் தண்ணீர் ஊற்றி வெளியேற்றிருக்கிறார். பின்னர் குக்கரில் சமைக்கப்பட்ட உடலை, அருகில் உள்ள ஏரியில் கொண்டு வீசியுள்ளார். ஆனால் கடைசியில் போலீசாரின் விசாரணையில் மாட்டிக்கொண்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், மனைவியின் உடலை அப்புறப்படுத்த மலையாளப்படத்தை பார்த்துதான் ஐடியா கிடைத்ததாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இவ்வளவு கொடூரமாக நடப்பது இது முதல் முறை கிடையாது. இந்த குற்றம் இத்துடன் நிற்கப்போவதும் கிடையாது. ஆனால் குற்றத்திற்கான உண்மையான மூல காரணங்களை கண்டுபிடித்தால் நிச்சயம் இந்த குற்றத்திற்கு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications