மாரடைப்பால் திடீர் மரணம்.. பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
ஹைதராபாத்: தெலங்கானாவில் பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்த போது 25 வயது இளைஞர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் நிகழும் திடீர் மாரடைப்பு மரணங்கள் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்து உயிரிழப்பது, நடந்துக்கொண்டிருக்கும்போது அப்படியே சரிந்து விழுந்து மரணிப்பது போன்ற வீடியோக்கள் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அந்த வகையில் தெலங்கானா மாநிலம் நாகோலில் இதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. இங்கிருக்கும் உள்விளையாட்டு அரங்கில், சக இளைஞர்களுடன் 25 வயது இளைஞரான குண்ட்லா ராகேஷ் பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்தார். இவருக்கு வந்த பந்தை மிஸ் செய்திருக்கிறார். இறகு பந்து, சற்று தள்ளி விழுந்திருக்கிறது. இதை ராகேஷ் குனிந்து எடுத்திருக்கிறார். அப்போது திடீரென கீழே மயங்கி விழுந்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அவரை காப்பாற்ற சக இளைஞர்கள் சிபிஆர் முதலுதவியை முயற்றித்திருக்கின்றனர். ஆனால் ராகேஷ் கண் முழிக்கவில்லை. எனவே உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்திருக்கிறார்கள். இருப்பினும் ராகேஷின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவர்கள், ராகேஷ் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் இதபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த 2023ம் ஆண்டு மட்டும் சுமார் 10 பேர் இதுபோன்ற திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
2023ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ஹைதராபாத்தில் உறவினர் திருமணத்தில் பங்கேற்றிருந்த 40 வயது நபர் இதேபோல திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அடுத்த 2வது நாள் அதாவது பிப்ரவரி 22ம் தேதி ஹைதராபாத்தில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயது காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து, அதாவது பிப். 25ம் தேதி நிர்மல் மாவட்டத்தில் உறவினர் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கொஞ்சம் நாட்கள் கழித்து, அதாவது 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள விநாயகர் மண்டபத்தில் நடனமாடிக் கொண்டிருந்த 26 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த திடீர் மாரடைப்புக்கு பல்வேறு காரணங்களை மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர்.
1. ஹைப்பர்ட்ரோபிக் கார்டியோமயோபதி
2. அர்திமியாஸ்
3. அனோமாலஸ் கரோனரி ஆர்டரிஸ்
4. மயோகார்டிடிஸ்
5. டிலேட்டட் கார்டியோமயோபதி
6. மாரஃபன் சிண்ட்ரோம்
இதெல்லாம் திடீர் மாரடைப்புக்கான காரணத்திற்கான அறிவியல் பெயர்களாகும். இதய தசை தடிமனாவது பெரும்பாலும் இந்த மாரடைப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. இது இதய ரத்த குழாய்களை சுருக்கி விடுகிறது. எனவே இதயத்திற்கு செல்லும் ரத்தம் அடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications