நான் ரெடி! வயநாடு வேணாம், ஐதராபாத்தில் போட்டியிட தயாரா? ராகுலுக்கு ஓவைசி சவால்.. காங். மீது தாக்கு
ஐதராபாத்: காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடாமல் ஐதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா என்று அசாதுதீன் ஓவைசி சவால் விடுத்துள்ளார். மேலும் பாபர் மசூதி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இடிக்கப்பட்டது என்றும் விமர்சித்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் சந்திர சேகர் ராவ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே அங்கு தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தெலுங்கானாவில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பும் சந்திர சேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி உள்ளது.

அங்கு ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக மற்றும் காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்திலும் அரசியல் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வயநாடு தொகுதி எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் கேசிஆரையும் ஐதரபாத் எம்.பி ஓவைசியையும் கடுமையாக தாக்கி பேசினார். ராகுல் காந்தி பேசுகையில், நாடு முழுவதும் அனைத்து எதிா்க்கட்சித் தலைவர்கள் மீதும் மத்திய விசாரணை அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
அதேநேரம், ஊழலில் சாதனை படைத்து வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பிஆர்எஸ் தலைவர்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகள் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. அதேபோல், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர்கள் மீதும் எந்த வழக்குகளும் இல்லை. ஏனென்றால், இவ்விரு கட்சித் தலைவர்களையும் தனக்கு நெருக்கமான நபர்களாக பிரதமர் மோடி கருதுகிறார். தனக்கு நெருக்கமானவர்கள் மீது பிரதமர் எப்போதும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமே தாக்கப்படுகின்றன.
மோடி தனது சொந்த மக்களை ஒருபோதும் தாக்குவதில்லை. அவர் உங்கள் முதல்வர் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர்களை தனது சொந்தக்காரர்களாக கருதுகிறார், எனவே, அங்கு அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. அனைத்து ஊழல் ரெக்கார்டுகளும் முறியடிக்கப்பட்டுள்ளன, ஆனால் எந்த வழக்கும் இல்லை. அடுத்த 100 நாட்களில் பிஆர்எஸ் ஆட்சி போய்விடும், பாஜக அல்லது ஏஐஎம்ஐஎம் என யாராலும் அதை மாற்ற முடியாது" என்று சாடினார்.
இந்த நிலையில், ஐதரபாத்தில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் ஒவைசி, ராகுலை கடுமையாக விமர்சித்து பேசினார். ஓவைசி கூறுகையில், "நான் உங்களுக்கு (ராகுல் காந்தி) ஒரு சவால் விடுக்கிறேன். வயநாடு தொகுதியில் போட்டியிடாமல் ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுங்கள். நீங்கள் தொடர்ந்து பெரிய வாக்குறுதிகளை கொடுத்து வருகிறீர்கள். களத்திற்கு வாங்க.. என்னுடன் போட்டியிடுங்கள். நான் ரெடியாக இருக்கிறேன். பாபர் மசூதி மற்றும் மசூதியின் செயலகம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் உடைக்கப்பட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications