பிரபல தொழிலதிபர் 70 முறை குத்தி படுகொலை.. சொந்த பேரன் கைது.! ஹைதராபாத்தில் திக்திக்!
ஹைதராபாத்: சொத்து தகராறில் தொழிலதிபரை சொந்த பேரனே கொடூரமாக கொலை செய்துள்ளார். சொத்து பகிர்வு குறித்து இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கொலை செய்யப்பட்ட அந்த பிரபல தொழிலதிபருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பணம் என்று வந்துவிட்டால் இங்கு சிலர் குடும்பத்தை கூட பெரிதாக நினைப்பதில்லை. பணமே பிரதானம் என அவர்கள் நினைப்பதால் பல மோசமான சம்பவங்களும் கூட அரங்கேறிவிடுகிறது.

அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது ஹைதராபாத்தில் நடந்துள்ளது. அங்கு சொத்து தகராறில் சொந்த பேரன் தொழிலதிபரை கொடூரமாக கொலை செய்துள்ளான். சொத்து பிரிப்பது தொடர்பாக தகராறு எழுந்த நிலையில், தாத்தாவை சுமார் 70 முறை குத்தி மிக கொடூரமாக கொலை செய்ததாக கூறி பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்..
தொழிலதிபர் கொலை:
இதில் கொல்லப்பட்ட தொழிலதிபர் 86 வயதான வேலமதி சந்திரசேகர ஜனார்த்தன ராவ் ஆவார். அங்கு புகழ்பெற்ற வேல்ஜன் குழுமத்தின் தலைவர் இந்த சந்திரசேகர் தான். சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவரது வீட்டிலேயே வைத்து அவரது பேரன் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாக போலீசார் கூறுகிறார்கள்.
என்ன நடந்தது:
சொத்து விவகாரம் குறித்து தாத்தாவும் பேரனும் பேச தொடங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சந்திரசேகர் நியாயமே இல்லாத முறையில் சொத்தை பகிர்ந்து கொடுத்துள்ளதாக 29 வயதான பேரன் கிலாரு கீர்த்தி தேஜா கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக வெடித்து இருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த பேரன் கீர்த்தி தேஜா தனது தாத்தாவை சுமார் 70 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது சந்திரசேகரின் மகள் சரோஜினி தேவி தலையிட்டு காப்பாற்ற முயன்றார். இதனால் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்:
இந்த வழக்கில் கீர்த்தி தேஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த கீர்த்தி தேஜா அமெரிக்காவில் முதுகலை பட்டம் படிக்க சென்றிருந்தார். அவர் மிக சமீபத்தில் தான் படிப்பை முடித்துவிட்டு ஹைதராபாத் திரும்பியிருந்தார்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய தேஜா தனது தாத்தாவை பார்க்க அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போது தான் இருவருக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேஜா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தக் கட்ட விசாரணை நடந்து வருகிறது.
யார் இந்த ஜனார்த்தன ராவ்:
படுகொலை செய்யப்பட்ட ஜனார்த்தன ராவ் ஹைதராபாத்தில் வசிக்கும் ஒரு மிக முக்கியமான தொழிலதிபர் ஆவார். கப்பல் கட்டுதல், எரிசக்தி மற்றும் தொழில்துறை என பல்வேறு துறைகளில் அவரது நிறுவனங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி அவர் பல்வேறு சமூக சேவைகளுக்கும் தொடர்ந்து நிதியுதவி அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனார்த்தன ராவின் மரணம் அங்கு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications