கொரோனா இருக்கா இல்லையா.. வெறும் 20 நிமிஷத்தில் தெரியும்.. ஐஐடி ஹைதராபாத்தின் அசத்தல் கருவி!
ஹைதராபாத்: ஹைதராபாத் ஐஐடி நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய கருவி மூலம் வெறும் 20 நிமிடத்தில் கொரோனா இருக்கா இல்லையா என்பதை கண்டுபிடித்து விட முடியுமாம்.
தற்போது உள்ள ஆர்டி பிசிஆர் சோதனஐக்கு மாற்றாக இதை, இந்தக் கருவியை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். தற்போது இந்தியாவில் பிசிஆர் சோதனைகள்தான் கொரோனாவைரஸ் தாக்கத்தைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இதில் முடிவு தெரிய குறைந்தது 20 மணி நேரமாவது ஆகும். இந்த நிலையில்தான் வெறும் 20 நிமிடத்தில் முடிவைச் சொல்லும் புதிய கருவியை ஹைதராபாத் ஐஐடி நிறுவன ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

வெறும் ரூ. 500தான்
அதை விட முக்கியமானது இந்த கருவியின் விலையும் மிக மிக குறைவாகும். இந்தியாவில் உள்ள அதிக மக்கள் தொகைக்கு இந்தக் கருவி மிகப் பெரிய வரப்பிரசாதம் என்று சொல்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தக் கருவியின் விலை வெறும் 500 ரூபாய்தான். பெருமளவில் இதை உற்பத்தி செய்யும்போது விலை மேலும் குறைந்து ரூ. 350க்கு கூட விற்க முடியும் என்றும் இந்த ஆய்வுக் குழு கூறுகிறது.

விரைவில் அனுமதி
இந்த சோதனைக் கருவிக்கு காப்புரிமை கேட்டு தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாம். அதேசமயம், ஹைதராபாத்தில் உள்ள ஈஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த கருவி பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஐசிஎம்ஆரின் ஒப்புதலுக்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

20 நிமிடத்தில் அறியலாம்
இதுகுறித்து கூறிய, ஆய்வுக் குழுவின் தலைவரான ஐஐடி ஹைதராபாத் நிறுவனத்தின் மின் பொறியியல் துறை தலைவர் சிவ் கோவிந்த் சிங் கூறுகையில், அறிகுறிகள் உள்ள மற்றும் அறிகுறிகள் இல்லாதவர்களிடம் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என்பதை 20 நிமிடத்தில் அறியும் வகையிலான கருவியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

சிறந்த கருவி
இந்தக் கருவியானது தற்போது உள்ள பிசிஆர் கருவியை விட சிறந்தது. அதை விட சிறப்பாக செயல்படக் கூடியது. விலையும் மலிவுதான். எங்கும் இதை எடுத்துச் செல்லலாம். எந்த இடத்தில் வைத்தும் சோதனை செய்யலாம். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக இது விளங்கும் என்றார் சிவ் கோவிந்த் சிங்.

டெல்லியைத் தொடர்ந்து ஹைதராபாத்
ஏற்கனவே டெல்லி ஐஐடியும் இதேபோன்ற ஒரு குறைந்த விலை சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தும் குறைந்த விலை சாதனத்தை உருவாக்கி அசத்தியுள்ளது. ஹைதராபாத் குழு கூறுகையில், எங்களது சோதனையில் கிடைக்கும் முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அத்தனை துல்லியமாக முடிவுகள் கிடைக்கின்றன என்று கூறியுள்ளது.
Recommended Video

நிலைமை மோசம்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் வரிசையில் இந்தியா மிக மோசமான நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அதாவது 5வது இடத்திற்கு தற்போது வந்து விட்டது. தற்போதும் பாதிப்பு குறையாமல் அதிகரித்து வருவதால் விரைவில் மேலும் மோசமான நிலைக்கு இந்தியா செல்லக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது. எனவே இதுபோன்ற குறைந்த விலை பரிசோதனைக் கருவிகளை விரைவாக ஆராய்ந்து அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் சோதனைகளை எளிதாக அதிகரிக்க முடியும் என்று அனைத்துத் தரப்பும் கருதுகிறது.












Click it and Unblock the Notifications