மெஸ்ஸி கொடுத்த பரிசு.. உற்சாகம் அடைந்த ராகுல் காந்தி.. ஐதராபாத்தில் கெத்து காட்டிய ரேவந்த் ரெட்டி!
ஐதராபாத்: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தனது கையொப்பமிட்ட ஜெர்ஸியை பரிசாக வழங்கி இருக்கிறார். அதேபோல் மெஸ்ஸியுடன் ராகுல் காந்தி மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களை சந்தித்த காட்சிகள் சோசியல் மீடியாவில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பீலே, மாரடோனாவுக்கு பின் கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக மெஸ்ஸி வலம் வருகிறார். அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ள நிலையில், அது மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பைத் தொடராக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

நேற்று கொல்கத்தா வந்த லியோனல் மெஸ்ஸி, தனது 70 அடி உயர சிலையை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களை 20 நிமிடங்கள் சந்தித்துவிட்டு உடனடியாக புறப்பட்டு சென்றார். இதனால் ரூ.12,500க்கு டிக்கெட் பெற்று மெஸ்ஸியை பார்க்க குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சால்ட் லேக் மைதானத்தை சுக்குநூறாக்கினர்.
அந்த மைதானத்தில் வன்முறை ஏற்பட்ட சூழலில், உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். இதன்பின் டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாலையில் ஐதராபாத் வந்த மெஸ்ஸியை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வரவேற்றார். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்க கூடாது என்று 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
இதன்பின் ஐதராபாத் வந்த ராகுல் காந்தி நேராக மெஸ்ஸி தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று சந்தித்தார். இதையடுத்து மெஸ்ஸியுடன் சில நிமிடங்கள் உரையாடிய ராகுல் காந்தி, அவருடன் இணைந்து மைதானத்திற்கு வந்தார். மைதானத்தில் மெஸ்ஸியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். இதையடுத்து மைதானத்தில் ரசிகர்களை நோக்கி சில பந்துகளை கிக் செய்தார்.
தொடர்ந்து ராகுல் காந்திக்கு தனது கையொப்பமிட்ட ஜெர்சியை மெஸ்ஸி பரிசாக வழங்கினார். இதன்பின் மெஸ்ஸி மற்றும் ரேவந்த் ரெட்டி அணிகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி சில நிமிடங்கள் நடைபெற்றது. கொல்கத்தாவில் சொதப்பிய மெஸ்ஸியின் நிகழ்ச்சியை, ஐதராபாத்தில் ரேவந்த் ரெட்டி சிறப்பாக நடத்தி இருப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications