மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா.. உலக அழகி போட்டியில் எந்த இடத்தை பிடித்தார்?
ஐதராபாத்: 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா வென்றுள்ளார். இந்திய மதிப்பில் அவருக்கு ரூ.8.5 கோடி பரிசாக அளிக்கப்பட்டுள்ள நிலையில், மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நந்தினி குப்தா எத்தனையாவது இடத்தை பிடித்தார் என்று பலரும் தேடி வருகின்றனர். அது குறித்து பார்க்கலாம்.
2025ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி ஐதராபாத் நகரில் நடைபெற்றது. மே முதல் வாரம் முதலே உலக அழகி போட்டி ஒவ்வொரு சுற்றுகளாக நடந்து வந்த நிலையில், நேற்று இரவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகியான ஓபல் சுச்சாடா ஸ்வாங்ஸ்ரீ உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

டாப் 3 உலக அழகிகள்
22 வயதாகும் இவர், தாய்லாந்தில் இருந்து உல்க அழகி பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். உலக அழகி பட்டத்தை வென்ற இவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடத்தை அணிவித்தார். தொடர்ந்து 2வது இடத்தை எத்தியோப்பியாவின் ஹாசெட் டெரிஜியும், 3வது இடத்தை போலாந்து நாட்டின் மஜா க்ளாஜ்தாவும் பிடித்தனர்.
மிஸ் இந்தியா நந்தினி குப்தா
இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற நந்தினி குப்தா எத்தனையாவது இடத்தை பிடித்தார் என்று பலரும் தேடி வருகின்றனர். ஏனென்றால் இந்தியாவில் இருந்து இதுவரை 6 முறை உலக அழகி பட்டம் கைப்பற்றப்பட்டுள்ளது. 72 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் உலக அழகி போட்டியில் 6 முறை இந்திய பெண்கள் வென்றிருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

6 முறை வென்ற இந்திய பெண்கள்
1966ஆம் ஆண்டு ரெய்தா ஃபரியா, 1994ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், , 1997ஆம் ஆண்டு டயானா ஹெய்டன், 1999ஆம் ஆண்டு யுக்தா மூக்ஹே, 2000ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா, 2017ஆம் ஆண்டு மனுஷி சில்லர் ஆகியோர் வென்றுள்ளனர். இதனால் நடப்பாண்டில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
உலக அழகி போட்டி
உலக அழகி போட்டியில் மொத்தமாக 108 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதன்படி முதல் சுற்றில் 4 கண்டங்களில் இருந்து டாப் 10 போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் 2வது சுற்றில் 40 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்பார்கள். அதன்பின் 3வது சுற்றில் 4 கண்டங்களைச் சேர்ந்த டாப் 5 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் 3வது சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 20ஆக குறையும்.

டாப் 20ல் வந்த நந்தினி குப்தா
இதன்பின் மீண்டும் 4 கண்டங்களில் இருந்து டாப் 2 போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் 4வது சுற்றில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 8ஆக குறையும். இந்த சுற்றில் தான் இந்தியாவின் நந்தினி குப்தா வெளியேறி இருக்கிறார். ஆசிய கண்டத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து அழகிகள் டாப் 2 இடங்களை பிடித்ததால், நந்தினி குப்தா வெளியேற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications