என்டிஆருக்கு கௌரவம்.. ஆனா மனைவிக்கே அழைப்பு இல்லை! “என்ன கொடுமை”.. குமுறிய லட்சுமி பார்வதி!
ஹைதராபாத்: என்.டி.ஆர் நுற்றாண்டு நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்வுக்கு தான் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக என்.டி.ஆரின் மனைவி லட்சுமி பார்வதி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வரும், பழம்பெரும் நடிகருமான என்டிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பெயரில், அவரது உருவத்துடன் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்த மாதம் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் எண்டிஆர் நூற்றாண்டு நினைவாக சிறப்பு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது.

என் டிஆர் நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவுக்கு எண்டிஆர் குடும்பத்தினருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா, பேரன் ஜூனியர் என்.டி.ஆர், முன்னாள் முதல்வரும் என்.டி.ஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். ஆனால் என்டிஆரின் மனைவி லட்சுமி பார்வதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்துள்ள என்டிஆர் மனைவி லட்சுமி பார்வதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் என்டிஆர் பெயர் கொண்ட நாணயம் வெளியிடுவதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டோர் பட்டியலில் தனது பெயரையும் சேர்க்க வேண்டும் என்று லட்சுமி பார்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் தான் என்.டி.ஆரை திருமணம் செய்து கொண்ட தகவலையும், 1994 தேர்தலில் தனது கணவர் என்டிஆருக்காக பிரச்சாரம் செய்ததையும் லட்சுமி பார்வதி ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஆனால், தனக்கு அழைப்பு விடுக்காமல், என்.டி.ஆரின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என லட்சுமி பார்வதி விமர்சித்துள்ளார்.

செப்டம்பர் 11, 1993 இல் என்டிஆர்-ஐ தான் திருமணம் செய்துகொண்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்ததாகவும், 1994 தேர்தலில் ஒன்றாக பிரச்சாரம் செய்ததாகவும் அந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 226 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சந்திரபாபு நாயுடு, என்டிஆர் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடித்தார். இதன் காரணமாக ஜனவரி 18, 1996 அன்று என்டிஆர் இறந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
100 ரூபாய் நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு என்டிஆர் குடும்ப உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவரது சட்டப்பூர்வ வாரிசாக உள்ள நான் புறக்கணிக்கப்பட்டுள்ளேன். எனவே, இந்தியாவின் முதல் பெண்மணி என்ற முறையில், இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications