நடிகர் ஜூனியர் என்டிஆர்-அமித்ஷா டின்னர்! பின்னணியில் 4 முக்கிய காரணம்! ஆபரேஷன் சவுத்தில் பாஜக ஆர்வம்
ஐதராபாத்: ‛ஆபரேஷன் சவுத் இந்தியா' திட்டத்தின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஐ தரபாத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்து ஒன்றாக டின்னர் சாப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின் பின்னணியில் 4 முக்கிய காரணங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடே சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ராஜகோபால் ரெட்டி. இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் விரைவில் தொகுதிக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் ராஜகோபால் ரெட்டி பாஜகவில் இணைய உள்ளார். முனுகோடே தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி இன்று மத்திய உள்துறை அமித்ஷா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ராஜகோபால் ரெட்டி பாஜகவில் இணைந்து மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

அமித்ஷா- ஜூனியர் என்டிஆர் சந்திப்பு
இதற்கிடையே தான் இன்று இரவு அமித்ஷா, தெலுங்கு திரைப்பட நடிகரான ஜூனியர் என்டிஆரை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னால் பல்வேறு முக்கிய காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பாஜகவின் ‛ஆபரேஷன் சவுத் இந்தியா' திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் பின்னணியில் பாஜக 3 முக்கிய கணக்குகளை போட்டுள்ளது. அதுபற்றிய சில விபரங்கள் வருமாறு:

முதல் காரணமாக அரசியல் ஆசை
அதாவது தெலுங்கு திரைப்படங்களில் ஜொலித்ததவர் சீனியர் என்டிஆர்(என்டி ராமராவ்). இவர் கடந்த 1982ம் ஆண்டு ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை துவங்கி அரசியலில் குதித்தார். அவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதல் அமைச்சரானார். இந்த சீனியர் என்டிஆரின் பேரன் தான் ஜூனியர் என்டிஆர். தாத்தா சீனியர் என்டிஆர் திரைத்துறையில் ஜொலித்து அரசியலில் கோலாச்சிய நிலையில் தற்போது அவரது குடும்பம் இருதுறையிலும் செல்வாக்கு மிகுந்தததாகவே உள்ளது. இருப்பினும் ஜூனியர் என்டிஆர் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகி திரைத்துறையில் முன்னணி நடிகராக உள்ளார்.இந்த சந்திப்பின் மூலம் அவரை அரசியலில் ஈடுபடுத்த பாஜக துவக்க புள்ளி வைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. ஏனென்றால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அவருக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருப்பதை கூறி அரசியல் ஆசை ஊட்டலாம். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம் என்பதால் அவரை அரசியலில் இழுத்து விடலாம் என பாஜக கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.

2வது காரணம்
மேலும் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இவர் பாஜகவை தற்போது கடுமையாக தாக்கி பேசி வருகிறார். குறிப்பாக மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடியை சரமாரியாக தாக்கி பேசுகிறார். இதனால் அவருக்கு பாடம் கற்பிக்க பாஜக விரும்புகிறது. இதனால் தான் கடந்த முறை பாஜகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தெலுங்கானாவில் நடந்தது. தற்போது ஜூனியர் என்டிஆர் உடனான சந்திப்பின் மூலம் அவரது ரசிகர்களை பாஜகவின் பக்கம் கொண்டு வரலாம். இது 2024ல் நடைபெறும் நாடாளுமன்றம் மற்றும் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கு உதவி செய்யும் என தொலைநோக்கு பார்வையில் பாஜக பார்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றன.

3 வது காரணம்
ஆந்திரா, தெலுங்கானாவை பொறுத்தவரை ஜாதி மற்றும் குடும்ப அரசியல் முன்னணியில் உள்ளது. அதன்படி ஆந்திராவில் இருந்து தெலுங்கானா புதிய மாநிலமாக பிரிந்த நிலையில் கம்மா வகுப்பை சேர்ந்தவர்கள் தெலுங்கானாவில் அதிகம் உள்ளனர். ஜூனியர் என்டிஆரும் அந்த வகுப்பை சேர்ந்தவர் தான். இதனால் அமித் ஷா ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் சந்திப்பு என்பது கம்மா பிரிவினரின் ஓட்டுக்களை பாஜகவின் பக்கம் இழுக்க வாய்ப்பாக இருக்கும் என அக்கட்சி நம்புகிறது.

4வது காரணம்
ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்கள் தமிழ்நாட்டை போல் மாநில கட்சிகளுக்கு தான் ஓட்டு அளிப்பார்கள். இங்கு தேசியக்கட்சிகள் தனித்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றுவது தற்போதைய சூழலில் பெரும் சவாலாக உள்ளது. இதனால் இருமாநிலங்களிலும் மாநில கட்சிகளின் ஆதரவு என்பது நிச்சயம் தேசிய கட்சிகளுக்கு வேண்டும். ஆந்திராவில் ஆட்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் மிகுந்த செல்வாக்குடன் உள்ளது. 175 தொகுதியில் 151 எம்எல்ஏக்கள் அக்கட்சிக்கு உள்ளனர். இதனால் ஜெகன்மோகன் ரெட்டி மாநில நலன் கருதி மட்டுமே தேசிய அரசியலில் பாஜக ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால் மாநிலத்தில் தனி செல்வாக்கு உள்ளதால் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. மாற்றுக்கட்சியான தெலுங்கு தேசம் சீனியர் என்டிஆரின் மருமகனான சந்திரபாபு நாயுடு வசம் உள்ளது. சீனியர் என்டிஆரின் மகளான நார புவனேஸ்வரியை திருமணம் செய்ததன் மூலம் தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவின் வசம் சென்றது. தற்போது ஆந்திரா அரசியலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வெறும் 23 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பாஜகவுடன் அந்த கட்சி கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஒருகாலத்தில் தெலுங்கு தேசம்-பாஜக இடையே கூட்டணி இருந்த நிலையில் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்ததால் கூட்டணி முறிந்தது. இந்த முறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜூனியர் என்டிஆர் மூலம் பாஜக முயற்சி செய்யலாம் எனவும், இதன்மூலம் தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆந்திராவில் போட்டியிட வாய்ப்பு தேடலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications