ஆரம்பிச்சிட்டாங்க.. தெலுங்கானாவில் பாஜக-ஓவைசி இடையே வார்த்தை யுத்தம்.. வழக்குப் பதிவு
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கும், ஓவைசிக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து 4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. எனவே லோக்சபா தேர்தலிலும் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்ற தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆனால், வழக்கம்போல ஓவைசி உள்ளே புகுந்து குட்டையை குழப்பிக்கொண்டிருக்கிறார்.
பாஜகவுக்கு எதிராக பேசி சிறுபான்மையினர் ஓட்டுக்களை ஓவைசி இழுத்து காங்கிரஸ் கூட்டணியை தோல்வியடையச் செய்வது வழக்கம் என்பது காங்கிரசின் குற்றச்சாட்டு. இப்போதும் ஓவைசி பாஜக மோதுவதால் அதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் புலம்புகிறார்கள்.
அதாவது பாஜக எம்பியான நவநீத் ராணா தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து மத ரீதியான மோதல்களை உருவாக்கும் விதத்தில் பேசி வருகிறார். எனவே இவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் மீண்டும் சர்ச்சயை கிளப்பும் வகையில் பேசி வருகிறார்.
கடந்த 2013ம் ஆண்டு ஓவைசியின் சகோதரர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் போலீஸ் சேவைகள் அனைத்தும் ஒரு 15 நிமிடம் ரத்து செய்யப்பட்டால் போதும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே உள்ள இடைவெளி சமமாக்கப்படும் என்று கூறியிருந்தார். இதை தோண்டி எடுத்து விமர்சித்துள்ள நவநீத் ராணா, "உங்களுக்கு 15 நிமிடங்கள் தேவை, எங்களுக்கோ 15 நொடிகள் போதுமானது" என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஓவைசி, "எனது சகோதரரை நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். அவர் ஒரு பீரங்கி" என்று கூறியிருந்தார். நவநீத் ராணா, "இந்தியாவின் ஒவ்வொரு தெருவிலும் பக்தர்கள் இப்போது சுற்றித் திரிகிறார்கள். நீங்கள் சொன்ன பீரங்கியை அவர்கள் அலங்காரத்திற்காக வீட்டிற்கு வெளியே வைத்திருக்கிறார்கள். இவர்கள் மோடியின் சிங்க குட்டிகள். நான் ஹைதராபாத்துக்கு தேர்தல் பரப்புரைக்காக வருகிறேன். என்னை தடுக்க யாருக்கு தைரியம் இருக்கிறது என்று பார்ப்போம்" என கூறியுள்ளார்.
இப்படியாக இரண்டு தரப்புக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்திருக்கிறது. ஆனால் இது உண்மையான விமர்சனங்கள் கிடையாது என்றும், காங்கிரஸுக்கு ஆதரவான இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை மழுங்கடிக்க செய்யவே ஓவைசியும், பாஜகவும் செயல்பட்டு வருகிறார்கள் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தெலுங்கானாவின் மொத்த 17 தொகுதிகளில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 9 இடங்களையும், பாஜக 4, காங்கிரஸ் 3, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 1 தொகுதியையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications