ஆந்திராவில் சத்தமே இல்லாமல் "ஸ்கோர்" செய்யும் பவன் கல்யாண்! எகிறும் ஆதரவு! ஜெகனுக்கு பெரிய சிக்கல்?
ஹைதராபாத்: ஆந்திராவில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், இதற்காக இப்போதே திட்டமிட்டு பவன் கல்யாண் இறங்கிவிட்டார். அவருக்குப் பெரிய ஆதரவு கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் இப்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நடந்து வருகிறது. அங்குக் கடந்த 4 ஆண்டுகளாக ஜென் மோகன் முதல்வராக இருந்து வருகிறார்.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கும் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும் கூட அங்குள்ள கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.
ஆந்திரப் பிரதேசம்: ஆந்திர மாநிலம் கடந்த 2014ஆம் ஆண்டில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக்கப் பிரிக்கப்பட்டது. அப்போது 2014 முதல் 2019 வரையில் அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தார். இதே காலகட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்று தனிக் கட்சி தொடங்கி மாநிலம் முழுக்க தீவிர பிரசாரம் செய்தார்.
மாநிலம் முழுக்க அவர் பாத யாத்திரை சென்றார். அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தார். இதன் முடிவுகள் தேர்தலில் எதிரொலித்து. 2019இல் நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. அந்தத் தேர்தலில் ஆந்திராவில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 கைப்பற்றி ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை அமைத்தார். 4 ஆண்டுகள் ஆகிவவிட்ட நிலையில், அடுத்தாண்டு தேர்தலுக்கு ரெடியாகிறது ஆந்திரப் பிரதேசம்.
கோபம்: இருப்பினும், இந்த முறை ஜெகன் மோகன் ரெட்டி அரசின் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கிறது. ஆந்திர தலைநகர் சர்ச்சை உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் ஜெகன் அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பிலும் கூட ஜெகன் மோகன் ரெட்டிக்கும் சந்திரபாபு நாயுடுவிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்றே சொல்லப்பட்டிருந்தது.
இதற்கிடையே இதில் பவன் கல்யாணும் இந்த ரேஸில் இணைந்துள்ளார். ஆந்திராவில் நடிகராக இருந்து பின்னர் அரசியல் கட்சியைத் தொடங்கியவர் பவன் கல்யாண். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஜன சேனா கட்சியை நடத்தி வருகிறார். கட்சியைத் தொடங்கி போதிலும் ஆண்டிற்கு ஒரு படத்திலாவது நடித்துவிடுவார். கடந்த 2019 தேர்தலில் இவரது கட்சி பகுஜுன் சமாஜ் மற்றும் இடதுசாரிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து இறங்கியது. அதில் ஒருவர் மட்டுமே வென்ற நிலையில், அவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் ஐக்கியமானார்.
பவன் கல்யாண்: ஆனால், இந்த முறை தேர்தலில் அழுத்தமாகத் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார். இதனால் கடந்த சில காலமாகவே அவர் தொடர்ச்சியாக அரசியல் சார்ந்து புயலைக் கிளப்பி வருகிறார். கடந்தாண்டு சாலை விரிவாக்கத்தின் போது குண்டூர் மாவட்டத்தில் சிலரது வீடுகள் இடிக்கப்பட்டன. அப்போது அவர்களைக் காண காரின் மேற்புறம் அமர்ந்து இவர் பயணித்தார். அது நேஷன்ல் லெவலில் டிரெண்டானது.
வரும் காலங்களில் ஜெகன் அரசுக்கு எதிராகப் பிரசாரத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்தால் இவரது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். இதைக் குறிவைத்தே பவன் கல்யாண் இப்போதும் செயல்பட்டு வருகிறார். இப்போது விசாகப்பட்டினத்திற்குச் சென்றுள்ள பவன் கல்யாண் அங்கிருந்தபடி ஜெகன் மோகன் ரெட்டியைக் கடுமையாக விளாசியுள்ளார். அங்குள்ள ருஷிகொண்டா மலையையே ஜெகன் அரசு அழித்துவிட்டதாக அவர் சாடியிருக்கிறார்.
கடும் தாக்கு: நேற்று பவன் கல்யாண் ருஷிகொண்டா சென்றிருந்தார். அங்குச் செல்லவே அவருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதையும் தாண்டி அங்குச் சென்ற பவன் கல்யாண் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்தார். அங்கு ருஷிகொண்டாவில் மிகப் பெரிய விதிமீறல்கள் அரங்கேறுவதாக அவர் சாடினார்.
ருஷிகொண்டா மலை பல நூற்றாண்டுகளாக இந்தப் பகுதியில் உள்ள பல கிராமங்களைச் சூறாவளியிலிருந்து பாதுகாத்து வந்ததாகத் தெரிவித்த அவர் இதை தற்போதைய அரசு அழித்துவிட்டதாகவும் அரசு மிகப் பெரிய தவறை செய்துவிட்டதாகச் சாடினார்.
என்ன பிளான்: இந்த முறை ஜெகன் அரசின் மீது மக்கள் கோபத்தில் உள்ள நிலையில், அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் பவன் கல்யாண் உறுதியாக இருக்கிறாராம். இதன் காரணமாகவே அவர் ஜெகன் அரசைக் கடுமையாக விமர்சித்தும் தொடர்ச்சியாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களைச் சந்திப்பையும் தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பிலும் ஜெகன் கட்சி 8% வரை இடங்களை வென்று 3ஆவது பெரிய கட்சியாக உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications