அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல்.. பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் மோடி.. ஓவைசி விமர்சனம்
ஹைதராபாத்: ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதால் பிரதமர் தனது பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் என்று மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இதில், வெள்ளி செங்கலை எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
இதன்பிறகு அவர் உரையாற்றுகையில், ராம ஜென்மபூமிக்கு விடுதலை கிடைத்துள்ளது என்றும், இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் ராமாயணம் வழக்கத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மோடி பேச்சு
மேலும், இந்த விழா மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது என்றும் தனது உரையின்போது மோடி குறிப்பிட்டார். இதனிடையே அசாதுதீன் ஓவைசி இன்று அளித்துள்ள பேட்டியில், அடிக்கல் நாட்டு விழாவில் மோடி பங்கேற்றதை விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதை பாருங்கள்.

மதசார்பற்ற நாடு
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. அப்படியிருக்கும்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளது, பதவி பிரமாணத்திற்கு எதிரானது. ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மை தோற்கடிக்கப்பட்டு இந்துத்துவா வெற்றி பெற்ற நாள் இதுவாகும்.

உணர்வுப்பூர்வ நாள்
தனக்கு மிகவும் உணர்வுபூர்வமான நாள் என்று பிரதமர் கூறியுள்ளார். எனக்கும் இது உணர்வுபூர்வமான நாள்தான். ஏனெனில், மக்களின் சமத்துவம் மற்றும் இணைந்து வாழ்தல் ஆகியவை தொடர்பாக எனக்கு உணர்வு உள்ளது. 450 ஆண்டுகளாக அங்கு மசூதி இருந்தது என்பதால் எனக்கும் இது உணர்வுபூர்வமான நாள்தான். இவ்வாறு அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

ஓவைசி கருத்து
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்று ஏற்கனவே, அசாதுதீன் ஓவைசி கூறியிருந்தார். இருப்பினும், மோடி இன்றைய நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.