ABCD கூட தெரியாத குழந்தைக்கு ரூ.1.78 லட்சம் ஸ்கூல் கட்டணம்! இது ரொம்ப ஓவர்.. குமுறும் பெற்றோர்கள்
ஹைதராபாத்: நமது நாட்டில் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாக இணையத்தில் புலம்வி வரும் நிலையில், ஹைதராபாத்தில் நர்சரி பள்ளிக்கான கல்விக் கட்டணம் குறித்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நர்சரி வகுப்பிற்கே ₹1,78,500 கட்டணமாக வசூலிப்பதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். இது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் பள்ளி கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பல காலமாகவே பெற்றோர்கள் புலம்பி வருகிறார்கள். குழந்தைகளுக்குத் தரமான கல்வியை உறுதி செய்யவே பெரும் தொகையை ஒதுக்கி வைக்க வேண்டி இருப்பதாகப் பெற்றோர்கள் புலம்புகிறார்கள்.

பள்ளி கட்டணம்
இதற்கிடையே பள்ளி கட்டணம் தொடர்பாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சாதாரணப் பள்ளி கட்டணமே கூட எந்தளவுக்கு காஸ்ட்லியான ஒன்றாக மாறிவிட்டது என்பதையே காட்டுவதாக இருக்கிறது. மேலும், இது இணையத்திலும் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அந்த நபர் பிரபலத் தனியார் பள்ளியின் கட்டணம் குறித்த போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நர்சரி வகுப்பிற்கான அந்தப் பள்ளி கட்டணம் நெட்டிசன்கள் உண்மையாகவே திகைக்க வைத்துவிட்டது. இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் அரசுக்கு வரியைச் செலுத்திய பிறகும் கூட குழந்தைகளுக்குத் தரமான கல்வியைப் பெற ஏன் இவ்வளவு போராட வேண்டும் என்ற கேள்வியையும் பலரும் எழுப்பியுள்ளனர்.
ரூ.1.7 லட்சம் கல்வி கட்டணம்
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான கட்டணத்தின் பில்லை அவர் பகிர்ந்துள்ளார். அது ஹைதராபாத்தில் இருக்கும் புகழ்பெற்ற பள்ளியாகும். டியூஷன் கட்டணத்தில் ஆரம்பித்து கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம் எது இது என ஏகப்பட்ட கட்டணத்தை அதில் போட்டுள்ளனர். மொத்தமாக நர்சரி பள்ளி மாணவர்களுக்கே பள்ளி கட்டணமாக ₹1,78,500 வசூலிக்கப்படுகிறது. அதேபோல +1 வகுப்புக்கு ₹2,50,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மூன்று தவணைகளாக இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்குத் தனி கட்டணம்
இது பள்ளிக்கான கட்டணம் மட்டுமே.. இதுபோக பதிவுக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். டெபாசிட்டாக ரூ.5000 செலுத்த வேண்டும். இந்த டெபாசிட் தொகையை மட்டும் திரும்பப் பெறலாம் என்பது ஒரே ஆறுதல்.! இது போக மாணவர்களை வீடுகளுக்கு வந்து பிக்அப் செய்து டிராப் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் தனி கட்டணம்.. பள்ளியில் இருந்து 5 கிமீ தொலைவுக்குள் இருந்தால் ரூ.45,000... 5 முதல் 10 கிமீ தொலைவுக்குள் இருந்தால் ரூ.53,000.. 10 கிமீக்கு மேல் இருந்தால் ரூ.59,800ஐ செலுத்த வேண்டுமாம்.
அந்த போட்டோவுடன் அந்த நெட்டிசன், "நர்சரி பள்ளிக்குக் கூட ₹1,78,500 கல்விக் கட்டணம் செலுத்த வேண்டுமாம்.. அரசியல்வாதிகளே, லட்சக்கணக்கில் வரி செலுத்திய பிறகும், நமது நாட்டில் கல்வி எப்படி வியாபாரம் ஆகிவிட்டது பாருங்கள்! நீங்கள் 31.2 சதவீத வருமான வரி, அதிக ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகளை வசூலிக்கிறீர்கள். ஆனால் வரி செலுத்தும் மக்களின் குழந்தைகளுக்கு இலவச, தரமான கல்வியைக்கூட உறுதி செய்ய முடியவில்லை.
காட்டம்
இனியும் உங்களை நீங்கள் தலைவர்கள் என்று அழைப்பதை நிறுத்தி கொள்ளுங்கள்.. நீங்கள் பணக்காரர்களுக்குச் சேவை செய்யும் அடிமைகள் தான். மத்திய அரசில் உள்ள படித்த அரசியல்வாதிகள் கூட தங்கள் அரசியல் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்த ஊழியர்களைப் போல நடந்துகொள்கிறார்கள்.. இந்தியா அடியோடு சீரழிந்துவிட்டது" என்ற பதிவிட்டுள்ளார்.
கடந்த 4ம் தேதி அவர் இந்தப் பதிவைப் பகிர்ந்தார். உடனடியாக அது இணையத்தில் டிரெண்டானது. கல்வி என்பது இந்தியாவில் ஒரு ஆடம்பரப் பொருளாக மாறிவிட்டது உண்மைதான் என நெட்டிசன்கள் விரக்தியுடன் பதிவிட்டு வருகிறார்கள். இன்னொரு நபர், "கல்வி முற்றிலுமாக பிஸ்னஸாக மாறிவிட்டது. சிறிய நகரப் பள்ளிகள் கூட மாதத்திற்கு ₹5,000 வசூலிக்கின்றன" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications