காங்கிரஸை கழற்றிவிட்டு மெகா கூட்டணிக்கு முயற்சித்த தெலுங்கானா முதல்வர் கேசிஆரை விளாசிய ராகுல்!
ஹைதராபாத்: தெலுங்கானா மக்களின் நலன்களுக்கு எதிரான அரசாங்கமாக முதல்வர் சந்திரசேகர ராவ் அரசு செயல்படுகிறது; மத்தியில் ஆளும் பாஜக, பிரதமர் மோடியுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளார் சந்திரசேகர ராவ் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூட இத்தகைய முயற்சியை முன்னெடுத்தார். ஆனால் காங்கிரஸ் இல்லாத கூட்டணி சரிப்படாது என பல கட்சித் தலைவர்கள் தெரிவித்துவிட்டனர்.

பாஜகவுடன் நெருக்கம்
இதனால் சந்திரசேகர ராவ் நீண்டகாலம் மவுனமாகவே இருந்தார். அத்துடன் பாஜகவுடன் இணக்கமாகவும் செயல்பட்டார். அடுத்த ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறும் போது தெலுங்கானா சட்டசபைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்த கேசிஆர் திட்டமிட்டுள்ளார். இதனால் இப்போது மீண்டும் பாஜக எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார் கேசிஆர்.

தேர்தலுக்காக திடீர் நிலைப்பாடு மாற்றம்
மத்தியில் ஆளும் பாஜகவை முன்னெப்போதும் விட கடுமையாக எதிர்க்கிறார் கேசிஆர். சிபிஐ விசாரணைக்கு பொது ஒப்புதல் ரத்து தொடங்கி மாநில சுயாட்சி முகமாக ஜொலிப்பது போல தோற்றமளிக்கிறார் கேசிஆர். பாஜக, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் தலைவர்களான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை நேரில் சந்தித்தார் கேசிஆர். தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் கேசிஆரின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக இடையே போட்டி உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸை கடுமையாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் கேசிஆர் உள்ளார்.

ஹைதராபாத் கூட்டத்தில் ராகுல்
இதனிடையே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ஹைதராபாத் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் பாஜகவும் ஒன்றுதான். இருவரும் ஒன்றாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு கட்சிகளின் சூழ்ச்சி வலைகளில் பொதுமக்கள் சிக்கிவிடக் கூடாது.

எல்லாமே நாடகம் கோப்பால்!
நாடாளுமன்றத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த ஒரு மசோதாவை கொண்டு வந்தாலும் முழு ஆதரவு தரக் கூடிய கட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிதான். பிரதமர் மோடியுடன் நேரடி தொடர்பில் உள்ளவர் சந்திரசேகர ராவ். மோடியின் உத்தரவின் பேரில்தான் தெலுங்கானாவில் செயல்படுகிறார் கேசிஆர். ஆனால் வெளியே இருவரும் எதிரிகள் போல நாடகமாடுகின்றனர். தெலுங்கானாவில் மொத்தம் 7 நாட்கள் பாதயாத்திரை நடத்தி இருக்கிறேன். விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்துள்ளேன். என்னதான் உழைத்தாலும் வருவாய் கிடைக்கவில்லை என புலம்புகின்றனர் தெலுங்கானா விவசாயிகள். அரசாங்கமும் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என குமுறுகின்றனர்.












Click it and Unblock the Notifications