வளர்ச்சி அரசியலால் வாரிசு அரசியல் நிராகரிக்கப்பட்டுள்ளது.. செயற்குழு கூட்டத்தில் சீறிய ஜே.பி.நட்டா
ஹைதராபாத்: இந்தியாவில் பாஜகவின் வளர்ச்சி அரசியலால் எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடியை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் தேசத்தை எதிர்க்க தொடங்கியுள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.

செயற்குழு கூட்டம்
நடப்பு ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், அடுத்த ஆண்டில் கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வியூகத்தை வகுப்பது முதலமைச்சர் வேட்பாளர், இதர வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூடிய கூட்டணி யூகங்களை உடைப்பது தொடர்பாக இதில் விவாதிப்பதற்காக பாஜக செயற்குழு கூடியுள்ளது.

ஜேபி நட்டா பேச்சு
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, இந்தியாவை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மத்திய அரசையும், அதன் திட்டங்களையும் சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் பாஜகவின் வளர்ச்சி அரசியலால் எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கேசிஆர் மீது விமர்சனம்
தொடர்ந்து ஹைதராபாத் வந்த பிரதமர் மோடியை தொடர்ந்து மூன்றாவது முறையாக வரவேற்காத தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை ஜெஎபி நட்டா விமர்சித்தார். அதில், சந்திரசேகர் ராவை பிரதமர் மோடியை நேரில் வந்து வரவேற்காததன் மூலம் நமது நாட்டின் கூட்டாட்சி நெறிமுறையை சீர்குலைத்ததோடு மட்டுமல்லாமல், அரசியல், கலாச்சாரம் மற்றும் சமூக ரீதியில் மரியதாயையும் உடைத்துள்ளார் என்று தெரிவித்தார்.

பாஜக ஆட்சியின் சிறப்பு
தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக மீதான வன்முறை தாக்குதல்களை கட்சித் தொண்டர்கள் எதிர்கொண்டுள்ளனர். நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனே காரணம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவல், உக்ரைன் போரில் சிக்கித் தவித்த மாணவர்களை மீட்டது என சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications