கல்லறை கட்டி.. ஜேபி நட்டாவை புதைத்ததாக தெலுங்கானாவில் போராட்டம்.. வாக்குறுதி நிறைவேறலைனா இப்படியா?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவை புதைத்துவிட்டதாக நடத்தப்பட்ட நூதன போராட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிரிய சமிதி (முந்தைய பெயர் டிஆர்எஸ்) கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் படுதீவிரமாக வியூகம் வகுக்கின்றன.
தெலுங்கானா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தெலுங்கானாவின் முனுகோட் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முனுகோட் இடைத் தேர்தல்
முனுகோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜ்கோபால். அண்மையில் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதனால் முன்கோட் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜ்கோபால் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

ஜேபி நட்டாவுக்கு எதிரான நூதன போராட்டம்
இந்த நிலையில் மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று செய்த செயல் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முனுகோட் தொகுதிக்குட்பட்ட மல்காபுரம் என்ற இடத்தில் இடுகாட்டில் ஒருவரை புதைத்தது போல் மண்மேட்டை உருவாக்கி அதில் மலர்மாலைகளை வைத்திருக்கின்றனர். அந்த இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவின் புகைப்படத்துடன் மண்டல புளோரைடு பாதிப்பு தொடர்பான ஆராய்ச்சி மையம் என்ற பதாகையையும் நட்டு வைத்துள்ளனர்.

பிரச்சனை இதுதான்
அதாவது கடந்த 2016-ம் ஆண்டு ஜேபி நட்டா முனுகோட் சட்டசபை தொகுதிக்கு வருகை தந்திருந்தார். அப்போது புளோரைடு பாதிப்பு தொடர்பான ஆராய்ச்சி அமையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை ஜேபி நட்டா அளித்திருந்தார். அந்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால் ஜேபி நட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்படி ஒரு செயலை சிலர் செய்திருக்கின்றனர். இது தொடர்பாக அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திலும் சர்ச்சை
அண்மையில் தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிந்துவிட்டதாக ஜேபி நட்டதாக கூறியது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான ஒதுக்கீடு இடத்துக்கு சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் எம்பி.க்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையை காணோம் என பேட்டி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications