இணையத்தில் சிறார் ஆபாச படம் பகிர்ந்த இளைஞர்.. ஹைதராபாத் சென்று தூக்கிய தமிழக போலீசார்
ஹைதராபாத்: நூற்றுக்கணக்கான குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறி ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞரை தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பி.காம் பட்டதாரியான அந்த வாலிபரை தமிழக மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் ஹைதராபாத் சென்று கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் சிறார்களின் ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பார்ப்பதும், பரப்புவதும், பதிவேற்றம் செய்வதும் சட்டப்படி குற்றம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் இப்படி ஆபாச படம் பார்ப்பதானால் தான் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு நிலவியது.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் சிக்னல் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை ஒரு கும்பல் பரப்பியதாக போலீசாருக்கு புகார் எழுந்தது. இதையடுத்து அந்த லிங்குகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தது.
இதில், நூற்றுக்கணக்கான குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றியது ஹைதராபாத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழகத்தின் மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் ஹைதராபாத் சென்று அந்த வாலிபரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கைதானவர் பெயர் வங்கா ரகுநாத் ரெட்டி என்பது தெரியவந்தது.
22 வயதான வங்கா ரகுநாத் ரெட்டி அங்குள்ள கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். அவரது செல்போனை ஆய்வு செய்து பார்த்த போது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் ஆபாச புகைப்படங்களும் இருப்பது தெரியவந்தது.
சிக்னல் ஆப் மற்றும் டெலிகிராமில் இவர் வீடியோக்களை அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவருக்கும் சிலர் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை அனுப்பியிருக்கின்றனர். அவர்களது விவரங்களை சேகரித்து, இதில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications