36 வருட பகையை முடித்து வைத்த ராகுல் காந்தி-சந்திரபாபு நாயுடு! ஒரே மேடையில் காங்.-டி.டி.பி தலைவர்கள்
Recommended Video

ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கு தேசம் கட்சி (TDP) தலைவரும், ஆந்திர முதல்வருமான, சந்திரபாபு நாயுடு இருவருமே தெலுங்கானாவில் நேற்று ஒரே மேடையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு புது வரலாறு படைத்துள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி இப்போது அங்கிருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ளது.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், மதசார்பற்ற ஜனதா தளகட்சித் தலைவர் தேவகவுடா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி உள்ளிட்டோரை சந்தித்து மிகப்பெரிய கூட்டணி அமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
மற்ற கூட்டணிகளை விடவும் காங்கிரஸ் கட்சியுடனான, தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணி என்பது தனித்துவம் கொண்டது. வரலாற்றில் முதல்முறையாக நிகழ்ந்திருக்கக்கூடியது. எனவே இந்த கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணி தனித்துவம் கொண்டது என்று கூறுவதற்கான காரணத்தை அறிய 36 வருடங்கள் பின்னோக்கி பயணிக்க வேண்டியது அவசியம்.

எம்ஜிஆர் போல என்டிஆர்
1982ஆம் ஆண்டில் என்.டி.ராமராவ், காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக தொடங்கிய கட்சிதான் தெலுங்கு தேசம். தமிழகத்தில் சினிமா மூலமாக அரசியலுக்கு வந்து, எம்ஜிஆர் எவ்வாறு பாமர மக்களாலும் மிகவும் மதிக்கப்பட்ட தலைவராக மாறினாரோ, அதுபோல என்.டி.ராமராவ் ஆந்திரத்தில் மிகப்பெரிய தலைவராக மதிக்கப்பட்டவர்.

என்டிஆர் கட்சி
காங்கிரஸ் கட்சியால் ஆந்திராவின் சுயாட்சி மற்றும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுவதாக கூறி தெலுங்கு தேசம் கட்சியை அவர் ஆரம்பித்தார். எவ்வாறு திமுகவிலிருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவை உருவாக்கினாரோ அதுபோன்ற ஒரு கோணத்தில் இதை பார்க்கலாம். அப்போது முதல், இதுவரை காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை எதிரிகளாகத்தான் மக்கள் பார்த்து வந்தனர். ஆனால் எதிர்த்து அரசியல் செய்த இரு கட்சிகளும் இப்போது பாஜகவுக்கு எதிராக கைகோர்த்துள்ளன.

பாஜகவிற்கு எதிராக
காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் அமைத்துள்ள இந்த கூட்டணி என்பது பாஜகவிற்கு பெரும் அடியை கொடுக்கக்கூடியது மற்றும், தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் பெரும் போட்டியை தரக்கூடியது என்ற வகையில் இவ்விரு கட்சியினரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். எதிர் துருவமாக இருந்த இரு கட்சிகளும் இணைந்து இருப்பது மற்றொரு பக்கம் சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது.

கடிதம்
என்.டி.ராமராவ் மனைவி, லட்சுமி பார்வதி சமீபத்தில் ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். அதில் தனது கணவர் எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தாரோ, அந்த நோக்கம் அவரது மருமகன் சந்திரபாபு நாயுடுவால் சிதைக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார். தனது கணவர் மறுபிறவி எடுத்து வந்து கட்சியின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ராமாராவ் மனைவி
ராமாராவ் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி லட்சுமி பார்வதி 1996இல் என்டிஆர் தெலுங்கு தேசம் என்ற ஒரு கட்சியை தொடங்கி ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் 2012 ஆம் ஆண்டு தனது கட்சியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வாதிகாரம்
தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர்களில் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான யனமாலா ராமகிருஷ்ணடு, இது பற்றி கூறுகையில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக ராமராவ் கட்சி தொடங்கவில்லை. அந்த சிஸ்டம் சரியில்லை என்றுதான் கட்சி தொடங்கி இருந்தார். இப்போது உள்ள சூழ்நிலையில் மதவாதம், சர்வாதிகாரம் ஆகியவற்றில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் சந்திரபாபுநாயுடு கூட்டணி அமைத்ததில் எந்த தவறும் இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.

ஒரே மேடை
இந்த நிலையில்தான் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் 36 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரே மேடையில் அமர்ந்து நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தனர். தெலுங்கானாவின் கம்மம் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இருவரும் ஒரே மேடையில் பங்கேற்றனர். இது ஆந்திர, தெலுங்கானா அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications