3 ஆண்டுகளுக்குப் பின் தெலுங்கானாவில் ராகுல் காந்தி.. தேர்தலுக்கான வாரங்கல் பிரகடனம் இன்று வெளியீடு
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை இன்று வாரங்கலில் ராகுல் காந்தி தொடங்குகிறார். விவசாயிகளுக்கான குறைந்தபட்ச விலை உள்ளிட்டவை தொடர்பான தேர்தல் வாக்குறுதியாக வாரங்கல் பிரகடனத்தையும் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்.
தெலுங்கானா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகளே கிடையாது என்பது ஆளும் டிஆர்எஸ் கட்சியின் நிலைப்பாடு. ஆனால் தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்பதில் காங்கிரஸ், பாஜக தீவிரமாக இருக்கின்றன.

தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார். வாரங்கலில் நடைபெறும் மிக பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பு விவசாயிகளுக்குமான தேர்தல் வாக்குறுதியாக வாரங்கல் பிரகடனம் ஒன்றையும் ராகுல் வெளியிடுவார் என்கின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.
இதே வாரங்கல் கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக போராடி உயிர் நீத்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் மேடையில் அமர வைக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார் ராகுல் காந்தி. நாளை ஹைதராபாத்தில் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசிக்க உள்ளார்.
தெலுங்கானா மாநிலத்துக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் ராகுல் காந்தி வருகை தருகிறார். ராகுல் காந்தியின் இந்த வருகையை அரசியல் சுற்றுலா என ஆளும் டிஆர்எஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications